யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கத் தேவையில்லையெனவும் பாதுகாப்பு அமைச்சர் கருணாசேன கெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அசம்பாவிதம் தொடர்பாக சிங்கள ஊடகம் ஒன்றுக்குத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவ குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடாத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்திற்காக பல்கலைக்கழகத்திற்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கத் தேவையில்லை.
பிரதமரின் ஆலோசனைக்கமைய சட்ட ஒழுங்கு அமைச்சர் சாலக ரத்நாயக்க யாழ்ப்பாணம் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளார். அத்துடன் யாழ்ப்பாணக் காவல்துறையினர் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் யாழ்ப்பாணக் காவல்துறை மா அதிபருக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
தெற்கில் சிலர் இதை இனவாதமாகப் பரப்புரை செய்கின்றனர். இந்தச் சம்பவம் அப்படியானதொன்றல்ல எனவும் தெரிவித்தார்.