Ad Widget

யாழ்ப்பாணத்தில் பகற்கொள்ளை, திருட்டு, மோசடிகள் அதிகரிப்பு

robberyயாழ்ப்பாணத்தில் பகற்கொள்ளைச் சம்பவங்கள், மோசடிகள் தொடர்ந்தும் அதிகரித்துச் செல்கின்றன என யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன தெரிவித்தார்.

கடந்த ஒருவாரத்தில் மட்டும் ரூபா 62 லட்சத்திற்கும் அதிகமான பெறுமதிக்கு தங்க நகைகள் மற்றும் பணம் என்பன அபேஸ் செய்யப்பட்டுள்ளன என அவர் கூறினார்.

எனினும் மேற்படிக் கொள்ளை மற்றும் மோசடிச் சம்பவங்களுடன் தொடர்புடைய எவரும் இதுவரைக்கும் கைது செய்யப்படவில்லை. விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன எனவும் பொலிஸ் அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.

யாழ்.பொலிஸ் நிலையத்தில் நேற்று காலை இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே விமலசேன இத்தகவல்களைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழில் கடந்தவாரம் பட்டப்பகல் வேளைகளில் வீடு மற்றும் வியாபார நிலைங்களை உடைத்து கொள்ளையடித்தல், வீட்டிற்குள் அத்துமீறி உட்பிரவேசித்து பொருட்களை திருடல் போன்ற 10 சம்பவங்களில் 34 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் என்பன அபகரிக்கப்பட்டுள்ளன.

மேலும் வேவ்வேறு 3 சம்பவங்களில் வியாபார நோக்கத்துக்காக காசோலைகள் கொடுத்து 27 இலட்சத்தி 25 ஆயிரம் ரூபா மோசடி இடம்பெற்றது.

இவ்வாறான 13 சம்பவங்களில் மோசடிச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அவர்கள் தலைமறைவாக இருப்பதால் கைது செய்ய முடியாதுள்ளது. அத்துடன் வீடுடைப்புக் கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களில் ஈடுப்பட்டவர்கள் தொடர்பாக எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை.

அச்சம்பவங்கள் தொடர்பாக தொடர்ச்சியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் அடிப்படையில் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன மேலும் தெரிவித்தார்.

Related Posts