Ad Widget

யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவை விரைவில்

மன்னார் மாவட்டத்திற்கு மட்டுமல்லாது புகையிரத சேவை எதிர்காலத்தில் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்படுமென அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

மடுப் பகுதியில் நேற்றய தினம் இடம்பெற்ற புகையிரத பாதையையும், புகையிரத நிலையத்தையும் மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரைநிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்தேவி புகையிரத சேவை அடுத்து வருட முற்பகுதியில் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென்றும் அதற்கான பூர்வாங்க வேலைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே வடபகுதியின் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் புகையிரத சேவைக்கும் முக்கியத்துவம் வழங்கியுள்ளார் என்பதையும் இங்கு நினைவு கூற விரும்புகின்றேன்.

அந்தவகையில் கிளிநொச்சி யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளுக்கான புகையிரதப் பாதைகள் சீரமைக்கவும் நாம் திட்டமிட்டுள்ளோம்.அந்த வகையில், ஏற்கனவே கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் றிசாட் பதியுதீன் யுத்தகாலத்தின் போது பல துன்ப துயரங்களை எமது மாவட்ட மக்களும் அனுபவித்திருந்தார்கள். மன்னார் மாவட்டத்தையும் வவுனியா மாவட்டத்தையும் ஊடறுத்து செல்லும் புகையிரத சேவையானது தலைமன்னார் வரையும் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் யுத்தத்தை முடிவிற்குக் கொண்டு வந்ததன் பின்னர் வடமாகாணம் தற்போது சிறப்பான அபிவிருத்தி கண்டு வருகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்தா உரையாற்றும் போது, 25 வருடங்களுக்குப் பின்னர் யுத்தத்தால் அழிவடைந்த புகையிரதப் பாதைகள் மீளப் புனரமைக்கப்பட்டு வருகின்றன. வெகுவிரைவில் யாழ்ப்பாணத்திற்கான புகையிரதப் பாதை மீள் புனரமைக்கப்பட்டு காங்கேசன்துறை வரையான புகையிரத சேவைகள் இடம்பெறும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு மீளமைக்கப்படுகின்ற போக்குவரத்துக்கான உட்கட்டமைப்பு வசதிகள் வடபகுதி மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது மட்டுமன்றி அதனூடாக மீண்டும் அபிவிருத்தியும், சமாதானமும் உருவாகும் ஒரு சூழலை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

Mannar-train

Related Posts