யாழ்ப்பாணத்தில் விலைக் கட்டுப்பாட்டு சோதனை அதிகாரிகளுடன் முரண்பட்ட வர்த்தகர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் ஜனாதிபதியினால் அரிசியின் கட்டுப்பாட்டுவிலை அறிவிக்கப்பட்ட பின்னர் நாடுமுழுவதும் உள்ள விலை கட்டுப்பாட்டு சோதனை பிரிவினரால் சோதனைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் யாழ்ப்பாணம் சத்திரத்துச் சந்திக்கு அருகாமையில் உள்ள வர்த்தக நிலையமொன்றிற்கு பொலிஸார் மற்றும் விலை கட்டுப்பாட்டு அதிகாரிகள் இன்று (வியாழக்கிழமை) விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டபோது அங்கே விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாமை தொடர்பாக அதிகாரிகளால் கேட்கப்பட்டது. இதன்போது வர்த்தக உரிமையாளர் மிகவும் கீழ்த்தரமான முறையில் விலை நிர்ணய அதிகாரிகளுடன் முரண்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது இதுகுறித்து அந்த அதிகாரிகள் பொலிஸாருக்கு தவகல் வழங்கியதன் பின்னர், அந்த இடத்திற்கு யாழ்ப்பாண பொலிஸார் வரவழைக்கப்பட்டு வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் மற்றும் அவருடைய சகாக்கள் என இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்ட இருவரும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும் விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.