நேபாள நாட்டின் சமாதானத்திற்கும்,மீள்கட்டுமானத்திற்குமான 9பேர் அடங்கிய குழுவினர் இன்று யாழ் வருகை தந்தனர்.
இவர்கள் காலை 9.30 மணியளவில் யாழ் பொது நூலகத்திற்கு சென்று அங்குள்ள பழைமை வாய்ந்த ஏடுகள் தொடர்பில் பார்வையிட்டு கேட்டறிந்தும் கொண்டனர்.
மேலும் தமது வருகையினால் யாழிலுள்ள மிகவும் பிரசித்தி பெற்ற இடங்களுக்கும் சென்று பார்வையிடவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து இவ் குழுவினர் யாழ் போதனா வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியசாலை பணிப்பாளர் பவானி பசுபதிராஜாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இன்று காலை 10மணியளவில் யாழ் போதனா வைத்தியசாலையிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றது.
மேலும் யாழில் ஏற்பட்டுள்ள பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆராயவே தாம் இங்கு வந்ததாகவும் அவர்கள் அவரிடம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கத்தை யாழ் மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
அமைதி மற்றும் புனரமைப்பு அமைச்சின் கீழுள்ள குழுவினரின் ஆய்வு பயணத்தின் ஓர் பகுதி என்பதால் யாழ் மாவட்டத்தின் மீள்கட்டுமானம், மீள்குடியேற்றம், வாழ்வாதாரம்,விவசாயம் ,வீதி அபிவிருத்தி,கைத்தொழில்அபிவிருத்தி மற்றும் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வடக்கின் வசந்தம்,வாழ்வின் எழுச்சி போன்ற பல்வேறு திட்டங்கள் தொடர்பிலும் அவர்கள் மேலதிக அரசாங்க அதிபரை கேட்டறிந்து கொண்டனர்.