Ad Widget

யாழில் தடுப்புக் காவல் சந்தேக நபர்களை மேலாடையை கழட்ட வைக்கும் பொலிஸார்!!

யாழ்ப்பாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்படும் சந்தேக நபர்களின் மேலங்கிகளை (சேர்ட் , ரி.சேர்ட்) கழட்டிய பின்னரே அவர்களை தடுப்பு காவலில் பொலிஸார் தடுத்து வைப்பதாக குற்றசாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்றன.

யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலையங்களில் சந்தேக நபர்களை தடுத்து வைக்க முதல் அவர்களின் மேலாடைகளை பொலிஸார் கழட்டிய பின்னரே தடுப்பு காவலில் தடுத்து வைக்கின்றார்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மோட்டார் சைக்கிளுக்கு உரிய வரி அனுமதி பத்திரம் மற்றும் காப்புறுதி பத்திரம் என்பன தொலைந்த நிலையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியை கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்திருந்தார்.

அதன் போது அந்த நபர் தான் கைது செய்யப்பட்டதை தனது வீட்டாருக்கு தொலைபேசி ஊடாக அறிவிக்க முயற்சித்த போது, அவரது அலைபேசியையும் பொலிஸார் பறித்து வைத்துள்ளனர்.

கைது செய்யப்படுவதனை அவதானித்த அவரது நண்பர்கள் மோட்டார் சைக்கிள் புத்தகத்தினை வீட்டிலிருந்து எடுத்து பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்ற போதிலும், பொலிஸ் பொறுப்பதிகாரி சுமார் ஒரு மணி நேரம் குறித்த நபரின் மேலங்கியை (ரி.சேர்ட்) கழட்டி , தடுப்பு காவலில் தடுத்து வைத்திருந்த பின்னரே அவரை விடுவித்திருந்தார்.

இருந்த போதும் மோட்டார் சைக்கிளை மூன்று நாள்கள் இழுத்தடிப்பு செய்த பின்னரே மீள வழங்கினார். அதனால் மோட்டார் சைக்கிள் உரிமையாளர் மூன்று நாள்களாக பல மணிநேரம் பொலிஸ் நிலையத்தில் காவல் இருந்தே மோட்டார் சைக்கிளை மீள பெற்று இருந்தார்.

அதே போன்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்படும் சந்தேக நபர்களுடைய மேலங்கிகளையும் பொலிஸார் கழட்டிய பின்னரே தடுப்பு காவலில் தடுத்து வைக்கின்றார்கள்.

பொலிஸாரின் இத்தகைய செயற்பாடு தொடர்பில் கேட்ட போது, பொலிஸ் தடுப்பு காவலில் சந்தேக நபர்கள் தமது மேலங்கியை பயன்படுத்தி தற்கொலை செய்து கொண்டமையால் மேலங்கியுடன் எவரையும் தடுத்து வைப்பதில்லை என கூறினார்கள்.

“பொலிஸ் தடுப்பு காவலில் மேலங்கியை (சேர்ட் , ரி.சேர்ட்) கழட்டி சந்தேக நபர்களை தடுத்து வைப்பது சித்திரவதை குற்றத்திற்குள் உள்ளடங்கும். கைது செய்யப்படும் நபர்களின் சுய கௌரவத்திற்கு இழுக்கு ஏற்படாதவாறு அவர்களை மனிதாபிமான அடிப்படையில் நடாத்த வேண்டும். உடல் ரீதியாக மாத்திரமின்றி உள ரீதியாக துன்புறுத்துவதும் சித்திரவதை குற்றத்திற்குள் உள்ளடங்கும்” என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

“பொலிஸ் தடுப்பு காவலில் மேலங்கியின்றி எவரேனும் தடுத்து வைக்கப்பட்டால், அல்லது அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் தெரிவித்தனர்.

Related Posts