Ad Widget

யாழில் டெங்கு நோய்த்தாக்கம் தீவிரம்

யாழ்ப்பாணத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த பருவ மழைக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் டெங்கு நோயின் பரம்பல் தீவிரமடைந்துள்ளதாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

Ketheeswaran

இது தொடர்பில் பிராந்திய சுகாதார பணிப்பாளர் புதன்கிழமை (14) அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த வருடத்தில் (2014) யாழ். மாவட்டத்தில் 1,378 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.கடந்த டிசம்பர் மாதத்தில் யாழ்ப்பாணம் சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 14 வயதுடைய சிறுவன் ஒருவன் டெங்கு நோயால் உயிரிழந்தான்.

யாழ். மாவட்டத்தில் இவ்வருடத்தின் (2015) தை மாதத்தில் இன்று வரை 100 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். நல்லூர் சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 16 வயதுடைய மாணவன் டெங்கால் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், நல்லூர் சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளில் அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த விசேட வேலைத்திட்டத்தில் ஒரு அங்கமாக, வெள்ளிக்கிழமை (16) யாழ் மாவட்டத்தை சேர்ந்த சகல சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளை சேர்ந்த வெளிக்கள உத்தியோகத்தர்கள் அனைவரும் நல்லூர் சுகாதார வைத்தியதிகாரி பிரிவிலும், யாழ் மாநகர சபைக்குட்பட்ட டெங்கு பரம்பல் தீவிரமாகவுள்ள வண்ணார்பணணை, நாவாந்துறை, குருநகர் ஆகிய பகுதிகளில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.

மேற்படி பிரதேச நிறுவனங்களின் தலைவர்களும் தமது நிறுவனத்தையும் சுற்றாடலையும் துப்பரவாக பேணுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

இதற்கு ஒத்துழைப்பு வழங்காத குடியிருப்பாளர்கள், நிறுவன தலைவர்கள் ஆகியோருக்கு எதிராக டெங்கு நோயின் அபாய நிலையைக் கருத்திற்கொண்டு சட்டவடிக்கை முன்னெடுக்கப்படும் என அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts