Ad Widget

யாழில் சுமார் 411 குடும்பங்களைச் சேர்ந்த 868நபர்கள் சுயதனிமைப்படுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள்!!

அனலைதீவு பகுதி மறு அறிவித்தல் வரை சுகாதார பிரிவினரால் முடக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

இன்று காலை அனலைதீவு பகுதியைச் சேர்ந்த மஞ்சள் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கடற்படையினர் கைது செய்யப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்ட நபர்கள் அனலைதீவு பிரதேசத்தில் நடமாடியதாக கருதப்படுவதன் காரணமாக அனலைதீவு பிரதேசம் சுகாதாரப் பிரிவினர் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக முடக்ப்பட்டுள்ளது. அத்தோடு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் காரைநகர் பிரதேசத்தில் நடமாடியதன் காரணமாக காரைநகர் பிரதேசத்தில் தற்போது வரை அடையாளம் காணப்பட்ட ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளன.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்பொழுது கொரோணா தொற்று ஒருவருக்கு மாத்திரமே உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது முற்பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன. யாழ் மாவட்ட சுகாதார மேம்பாட்டுக்குழுவினுடைய தீர்மானத்தின்படி சகல பிரதேச செயலகங்களின் ஊடாக கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின்ஊடாகவும் அதேநேரத்தில் சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் மாகாண சுகாதார பணிப்பாளர் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரது அறிவுறுத்தலின்படி சில முற் பாதுகாப்பு தொடர்பான ஏற்பாடுகளை வழங்கி அவர்களை நடைமுறைப்படுத்தும் படி வேண்டியிருக்கின்றோம்.

இந்த நிலையிலே தற்போது யாழ் மாவட்டம் ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் இன்னும் அபாயமான ஒரு சூழ்நிலை காணப்படுகிறது. ஆகவே முற்பாதுகாப்பு நடவடிக்கையினை அனைவரும் ஒருங்கிணைந்து எடுப்பது மிக கட்டாயமானதாகும்

இன்றைய நிலையில் சுமார் 411 குடும்பங்களைச் சேர்ந்த 868நபர்கள் சுயதனிமைப்படுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.புங்குடுதீவில் சுமார் 127 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். புங்குடுதீவில் ஒரு பகுதி தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட வில்லை. யாழ் மாவட்டத்தில் எந்த பகுதியிலும் ஊரடங்குச்சட்டம் அமுல்ப்படுத்தப்படவில்லை. அநேகமாக தற்பொழுது வதந்திகள் பரப்பப்படுகிறது. பொதுமக்கள் வதந்திகளை நம்பாதீர்கள்.

கொரோணா தொற்றுக்கு இனங்காணப்படுபவர்களோடு சம்பந்தப்பட்டவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை சுகாதாரப் பிரிவினர் மேற்கொண்டுள்ளார்கள்.
இருந்தபோதிலும் தற்பொழுது யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோணா அச்சம் முற்றாக நீங்கிவிடவில்லை. அதிகமாக வெளியூரில் இருந்து வருகை தந்து இங்கே தொழில் புரிகின்றவர்களை இனங்கண்டு அவர்களுக்கு PCR பரிசோதனை செய்வதற்குரிய நடவடிக்கைகளை சுகாதாரத் திணைக்களத்தினர் மேற்கொண்டுள்ளார்கள்.

அதிகம் தொற்றுள்ள கம்பகா மாவட்டம் மற்றும் ஏனைய மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து கடமையாற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த பரிசோதனைகளை நாங்கள் மேற்கொள்வதாக தீர்மானித்துள்ளோம். அத்தோடு வடக்கு மாகாண ஆளுநர் ஒரு அறிவுறுத்தலினை வெளியிட்டுள்ளார். மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அதாவது மேற்கு மாகாணங்களிலிருந்து இரு வாரங்களுக்குள் வருகை தந்தோர் தொடர்பான விவரங்களை சேகரித்து அவர்களுக்குரியPCRபரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அதே போன்ற ஒரு செயற்பாடு யாழ் மாவட்டத்திலும் கடந்த இரண்டு வாரங்களுக்குள் வெளி மாவட்டங்களில் இருந்து யாழ் மாவட்டத்திற்கு வந்தவர்கள் தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களுக்குரிய PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன .

எனவே அவ்வாறு வருகை தந்தவர்கள் தாங்கள் சுயமாக தங்களுடைய பதிவுகளை வைத்திய அதிகாரி பிரிவுகளில் வழங்கவேண்டும். அதேபோல் பிரதேச செயலர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் தங்களுடைய பிரதேசங்களில் இரண்டு வாரங்களுக்குட்பட்ட பகுதியில் வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தந்தோரின் பதிவுகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளோம்.

இன்று காலையில் அனலை தீவு பகுதியில் இரண்டு நபர்கள் மஞ்சள் கடத்தலில் தொடர்புபட்ட வகையிலே கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.அவர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள். அவர்கள் பயணம் செய்த இடங்கள் ஆராயப்பட்டு வருகின்றது.அதே நேரத்திலே தற்காலிகமாக தீவகத்துக்கான போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது .அதேபோல அனலை தீவு பகுதி தற்காலிகமாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வெளியேறாதவாறும் வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள் உட்செல்லாத வாறும் தடை விதிக்கப்பட்டு அப் பிரதேசம் முடக்கப்பட்டுள்ளது .இத்தகவலை சுகாதார வைத்திய அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

எனவே பொதுமக்கள் இதனைச் செயற்படுத்துவதற்கு தயாராக வேண்டும் எனினும் இனிவரும் காலங்களில் எந்த பகுதி முடக்கப்படும் என்பது தொடர்பில் சுகாதாரப் பகுதியினர் ஆராய்ந்து வருகிறார்கள்.

இவ்வாறான அசௌகரியங்கள் ஏற்படுவதை தடுப்பதற்கு கரையோரப் பகுதியில் உள்ள பொது மக்கள் மிகவும் விழிப்பாக செயற்பட்டு கடத்தலில் ஈடுபடுபவர்கள்பற்றிய விவரங்களை வழங்கினால் நாங்கள் மிக இலகுவாக தனிமைப்படுத்த லுக்கு அனுப்பி வைப்பதுடன் அசௌகரியங்கள் ஏற்படாதவாறு அந்தப் பிரதேசங்களை பாதுகாக்க முடியும்.

இன்று அனலை தீவு பகுதி அத்தோடு காரை நகர் பகுதியில் ஒரு பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டமைக்கு இந்த சட்ட விரோதச் செயற்பாடேகாரணமாக இருக்கின்றது. எனவே இது தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக செயற்படுவதன் மூலம் அசௌகரியங்களை தவிர்த்துக் கொள்ள முடியும்.

குறிப்பாக அரசாங்கத்தினால் தவிர்க்கப்படவேண்டியதென குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஒன்றுகூடல்கள் அதாவது வழிபாட்டுத் தலங்களில் ஒன்று கூடுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.மேலும் தற்போதைய நிலைமை வேறு மாவட்டங்களில் தீவிரமாகப் பரவி வருவதன் காரணமாக எமது மாவட்டத்திற்கும் வந்தால் அதனை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை இருக்கின்றது .எனவே இந்த நிலையிலே மாவட்டத்தைப் பாதுகாக்கும் பொருட்டு அனைவரும் இணைந்து செயற்படவேண்டும்.

புங்குடுதீவு பகுதியில் கொரணா தொற்றுக்குள்ளான நபர் பயணம் செய்த பஸ் வண்டியில் பயணித்தவர்கள் தொடர்பில் விபரங்களை கோரியிருந்தோம். சுகாதாரப் பிரிவினரால் குறித்த பஸ் இலக்கங்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்றைய நிலவரப்படி சுமார் 15 பேர் மாத்திரமே தமது பதிவுகளை சுகாதாரப் பிரிவினரிடம் மேற்கொண்டு ள்ளார்கள் .எனவே அவர்களும் தாமாக முன்வந்து தமது விபரங்களை சமர்பிக்கும் போது தமது சமூகத்தையும் தங்களையும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

கல்வித் திணைக்களத்தினை பொறுத்தவரைக்கும் அரசாங்கத்தினுடைய அறிவுறுத்தலின் பிரகாரம் முடக்கப்பட்ட பகுதிகளில் அல்லது முடக்கத்திற்குள்ளாக்கப்படும் என கருதப்படும் பிரதேசங்களில் பரீட்சைகள்நடாத்துதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது .பிரதானமாக மாணவர்கள் சுகாதார நடைமுறைகளுக்கமைய குறித்த பரீட்சைகள் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 5ம் வகுப்பு புலமைப் பரிசில் மற்றும் க பொ த உயர்தர பரீட்சைகள் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் கல்வித் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது . சூழ்நிலைக்கு ஏற்ப அதனை அனுசரித்து மாணவர்கள் சில வேளைகளில் தங்குமிட வசதியுடன் அந்த பரீட்சையினை எழுதுவதற்குரிய ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது .
தற்பொழுது முடக்கப்பட்டுள்ள புங்குடுதீவு மற்றும் அனலைதீவுபகுதிகளில் திட்டமிட்ட படி குறித்த பரிட்சைகள் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் பரீட்சைத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்..

Related Posts