Ad Widget

யாழில் குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் உயிரிழப்பு!

ஊரெழு அம்மன் ஆலயத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளனர்.

ஊரெழு பர்வவர்த்தனி அம்மன் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழாவில் நேற்று (வியாழக்கிழமை) மூன்றாம் திருவிழா நடைபெற்றது. இதன்போது மணிக்கூட்டுக் கோபுரத்திலிருந்த குளவிக் கூடு கலைந்ததால் அங்கு கூடியிருந்த பக்தர்கள் நாலா திசையும் ஓடினர்.

குளவிகள் பலருக்கும் கொட்டிய நிலையில், ஊரெழுவைச் சேர்ந்த ஐயாத்துரை அருந்தவராஜா என்ற 63 வயதான முதியவர் துடிதுடித்து வீழ்ந்தார்.

இதன்போது உடனடியாக அவசர அம்புலன்ஸ் சேவைக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அம்புலன்ஸ் வண்டிச் சாரதியையும் முதலுதவி உதவியாளரையும் குளவிகள் துரத்தின.

சம்பவ இடத்துக்கு வந்த கோப்பாய் பொலிஸார், உடனடியாகவே அங்கிருந்து வெளியேறினர். அதன் பின்னர் யாழ்ப்பாணம் மாநகர சபை தீயணைப்பு பிரிவுக்கு அறிவிக்கப்பட்டது.

குளவியைக் கலைப்பதற்கு எரிவாயு நிரப்பவேண்டும் என்பதால் தீயணைப்பு படை சம்பவ இடத்துக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது.

இதனால், குளவிக்கொட்டுக்கு இலக்கான முதியவர் உயிரிழந்தார். சம்பவத்தை அடுத்து ஆலயத்திலிருந்த பக்தர்கள் இடையே குழப்பநிலை ஏற்பட்டது.

இதேவேளை, காட்டுத் தேன் குளவிக் கூடே கலைந்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

Related Posts