Ad Widget

யாழில் அதிகரிக்கும் போதைப்பொருள்! : வடக்கு முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும்!!

யாழ். குடாநாட்டில் பொலிசாரின் அசமந்த போக்கினால் போதைபொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும் அதற்கு எதிராக வடமாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வட மாகாண சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடமாகாண சபையின் 115 ஆவது அமர்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்ற போதே குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, வடமாகாண சபையின் ஆளும்கட்சி உறுப்பினர் அயூப் அஸ்மீன், “யாழில் போதைபொருள் பாவனை அதிகரித்து வருகின்றது. பொலிஸார் அசமந்தமாக செயற்பட்டு வருகின்றனர். அதனால் வடமாகாண சபை இந்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசேட கவனயீர்ப்பு ஒன்றினை சபைக்கு கொண்டு வந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த ஆளும் கட்சி உறுப்பினர் எஸ்.சுகிர்தன், “யாழில் பாடசாலைகளை இலக்கு வைத்து மாணவர்கள் மத்தியில் போதைபொருள் பாவனையை பரப்புகின்றார்கள். இது தொடர்பில் பொலிசார் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே அவற்றை கட்டுப்படுத்த முதலமைச்சர் பொலிஸ் அதிகாரிகளை அழைத்து பேசுவதுடன் விசேட பொலிஸ் குழுவை நியமித்து போதை பொருள் பாவனையை மாணவர்கள் மத்தியில் பரவவிடாது கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுகிர்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவரின் கருத்தினைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த மற்றுமொரு ஆளும் கட்சி உறுப்பினரான இ. ஜெயசேகரம், “சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பானவர் எனும் வகையில் முதலமைச்சர் பொலிஸ், கடற்படை மற்றும் மாகாகண சபை உறுப்பினர்களை இணைத்து விசேட கூட்டம் ஒன்றினை கூட்டி இதற்கான நடவடிக்கையினை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Related Posts