எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது தொடர்பில் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை குறித்து சபாநாயகர் சமல் ராஜபக்ஷ கட்சித் தலைவர்களுடன் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ள நிலையில் இன்றையதினம் இது தொடர்பில் அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றுடன் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என நம்பப்படுகிறது.
தற்போது எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகிக்கும் நிமல் சிறிபால.டி.சில் வாவுக்கா, அல்லது தினேஷ் குணவர்த்தனவுக்கா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கா ஜே.வி.பிக்கா எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்ற அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிமல் சிறிபால.டி.சில்வாவுக்கோ அல்லது தினேஷ் குணவர்த்தனவுக்கோ எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோருவதற்கான உரிமை இல்லையென ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அல்லது தமக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என ஜே.வி.பியின் ஊடகச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமக்கு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வருமாயின் அதனை ஏற்றுக்கொள்ளத் தாம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், எதிர்க்கட்சியில் 13 ஆசனங்களைக் கொண்ட தமக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 13 ஆசனங்கள் இருக்கும் நிலையில் ஜே.வி.பிக்கு கொடுப்பது நியாயமாக அமையாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்குவதற்கு ஆளும் கட்சியில் இருக்கும் சிறுபான்மைக் கட்சிகள் பலவும் ஆதரவு தெரிவித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஐ.தே.க தலைமையிலான அரசாங்கம் உருவானது. சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐ.ம.சு.மு எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்தது.
இந்த நிலையில் கடந்த 22ஆம் திகதி 26 சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டு அரசாங்கத்தில் இணைந்து கொண்டனர். அது மாத்திரமன்றி அரசாங்கத்தில் சுதந்திரக் கட்சி இணைந்துகொள்வதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன அறிவித்திருந்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆளும் கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் இருக்க முடியாது என பாராளுமன்றத்தில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதுடன், சுதந்திரக் கட்சி அரசாங்கத்துடன் இணைந்திருப்பதால் நிமல் சிறிபால.டி.சில்வாவுக்கு எதிர்க்கட்சித் தலைவராகச் செயற்பட முடியாது என்ற குரல் வலுவடைந்தது.
இந்த நிலையில் தினேஷ் குணவர்த்தனவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சியிலுள்ள சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலர் கடிதமொன்றில் கையொப்பமிட்டு சபாநாயகரிடம் கையளித்துள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற சர்ச்சை தொடர்பில் ஏப்ரல் 7ஆம் திகதி தனது தீர்மானத்தை அறிவிப்பதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ கூறியிருந்தார். இது தொடர்பில் அவர் கட்சித் தலைவர்களுடன் பலசுற்றுக் கலந்துரையாடல்களையும் நடத்தியிருந்தார். இன்றைய தினத்துடன் இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.