Ad Widget

மே 18 தமிழர் தேசத்தின் தேசிய துக்க நாளாக அனுஷ்டிக்க வேண்டும்: தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி

மே 18 தமிழர் தேசத்தின் தேசிய துக்க நாளாக அனுஷ்டிக்குமாறு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மட்டு மாவட்ட அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ‘தமிழர் தேசத்தை சிங்களப் பேரினவாதப் பூதம் ஆக்கிரமித்த கரி நாள் மே 18 ஆகும். எனவே இந்த நாளைத் தமிழர் தேசத்தின் தேசிய இனவழிப்பு நாளாக அனுஷ்டிக்க வேண்டும்.

வடக்கு கிழக்கில் பூரண கடையடைப்புச் செய்து இல்லங்கள் பாடசாலைகள் அரச திணைக்களங்கள் மற்றும் பொது இடங்களில் கறுப்புக் கொடியை தொங்கவிட்டு துக்க நாளாக அனுஷ்டிக்க வேண்டும்.

உலகிலே எங்குமே நடக்காத இராணுவத்தின் அத்தனை கோரத்தாண்டவங்களும் நடந்தேறிய நாளே தாய்ப்பிணத்தில் பால் அருந்திய பிஞ்சுகளின் துயரத்தை தந்த நாள்.

சர்வதேசம் கண்ணை மூடிக் கொண்டிருந்த இந்த நாள் தமிழருக்கு, தமிழ்த்தேசம் தான் பாதுகாப்பையும் சுயகௌரவத்தையும் கொடுக்கும் என நிரூபித்த நாள், ஒவ்வொரு இனப்படுகொலையின் பின்பே நீதி பிறப்பெடுத்தது உலக வரலாறு.

எமது இனத்தின்மீது மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான அடக்குமுறைகளும் இனப்படுகொலைகளுமே எம்மக்களை போராடவைத்தது. ‘முள்ளிவாய்க்கால் பேரவலம்’ எம்மினத்திற்கு கிடைத்த விடுதலை வாசல். இந்நாளை எமது தாயக தேசத்தின் இனவழிப்பு நாளாக பிரகடனப்படுத்தி துக்க நாளாக அனுஷ்டிக்க வேண்டியது ஒவ்வொரு தன்மானத் தமிழனின் கடமையாகும்’ என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts