Ad Widget

முள்ளிவாய்க்காலில் கொத்துக்குண்டுகள்! : மற்றுமொரு ஆதாரம் வெளியீடு

பாரிய அழிவை ஏற்படுத்தும் வல்லமைக் கொண்ட கொத்துக் குண்டுகளை இலங்கை ராணுவத்தினர் இறுதிக்கட்ட போரின் போது பயன்படுத்தியதாக ஏற்கனவே பல ஆதாரங்கள் வெளியிடப்பட்டு வந்த நிலையில், தற்போது அதுகுறித்த புகைப்பட ஆதாரமொன்று வெளிவந்துள்ளது.

பிரித்தானியாவைச் சேர்ந்த பிரபல ஊடகவியலாளரான பிரான்ஸிஸ் ஹரிசன் (Frances Harrison), தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். குறித்த புகைப்படத்தில் வானில் ஒரு தொகுதி குண்டுகள் காணப்படுவதைப் போலவும், அது முள்ளிவாய்க்கால் வான்பகுதி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. போர் உக்கிரமடைந்த காலகட்டமான கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் திகதி எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, வெட்டவெளியில் மூன்று இளைஞர்கள் பயம் தோய்ந்த முகத்துடன் அழுதுகொண்டு இருக்க, சுற்றிவர ஆயுதங்களுடன் ராணுவத்தினர் காணப்படுவதைப் போன்ற ஒரு புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். 2009.05.09 அன்று எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் உள்ளவர்கள் எங்கே என்ற கேள்வியையும் ஹரிசன் எழுப்பியுள்ளார்.

அதேபோன்று 2009 மே மாதம் 26ஆம் திகதியன்று எடுக்கப்பட்ட இரு புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அவற்றுள் ஒரு புகைப்படத்தில் 9 இளைஞர்கள் காணப்படுவதோடு, ராணுவ தடுப்பு முகாமொன்றும் காணப்படுகிறது. குறித்த இளைஞர்களிடம் ராணுவத்தினர் பதிவை மேற்கொள்வது போன்றும் காணப்படுகிறது. அதே தினத்தில் எடுக்கப்பட்ட பிறிதொரு புகைப்படத்தில் இரு யுவதிகள் தரையில் அமர்ந்திருக்கும் நிலையில், அவர்கள் எங்கே என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

மேலும், அதே வருடத்தில் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில், குண்டு மற்றும் செல்வீச்சு தாக்குதலில் காயமடைந்த மக்கள் சிகிச்சை பெறுவதைப் போன்ற ஒரு புகைப்படமும் வெளியாகியுள்ளது.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது கொத்துக்குண்டுகள் வீசப்பட்டமைக்கான ஆதாரமாக, இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்தின் புகைப்படங்களை ஆதாரமாகக் கொண்டு, கடந்த 2016ஆம் ஆண்டு சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது. சர்வதேச ரீதியில் இவ்விடயம் பேசப்பட்டு வந்த நிலையில், இலங்கை அரசாங்கம் இதனை முற்றாக நிராகரித்திருந்தது.

அத்தோடு, இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பெருமளவான இளைஞர்களையும் யுவதிகளையும் ராணுவத்தினர் தடுத்து வைத்திருந்ததோடு, பின்னர் அவர்கள் முகாம்களுக்கு கொண்டுசெல்லப்பட்டு வதைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் குறித்த தகவல்கள் மர்மமாகவே உள்ள நிலையில், இவர்களை தேடி எட்டு வருடங்களாக உறவினர்கள் போராடி வருகின்றனர். இவ்வாறான நிலையில் தற்போது இப் புகைப்படங்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts