முல்லைத்தீவு மாவட்டத்தில் எவ்வித சிங்கள குடியேற்றங்களும் முன்னெடுக்கப்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியாக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் இரண்டாவது ஒன்றுகூடலின்போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சந்திப்பின்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் மகாவலி எல் வலயத்திட்டத்தில் பெரும்பான்மையினர் குடியேற்றப்பட்டு வருவதாக தெரிவித்து, அதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் கூட்டமைப்பின் சார்பில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டம் குறித்த அறிவிப்பை தொடர்ந்து சற்று கோபமடைந்த ஜனாதிபதி, ஆர்ப்பாட்டம் நடத்துவதாயின் பேச்சுவார்த்தையில் கலந்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த ஜனாதிபதி, ”நான் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இராணுவம் வசமிருந்த பொதுமக்களின் காணிகளில் 88 வீதமானவை விடுவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் முல்லைத்தீவில் மகாவலி ‘எல்’ வலய திட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகக் கூறுகின்றனர். ஆனால் ‘எல்’ வலயத்தில் எவ்விதமான சிங்களக் குடியேற்றங்களும் இடம்பெறவில்லை என்பதைப் பொறுப்புடன் கூறுகின்றேன்.
விரைவில் நான் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நேரடியாக விஜயம் செய்து கள நிலைமைகளை ஆராயவிருக்கின்றேன். அதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் என்னுடன் இணைந்து நிலைமைகளை பார்வையிடலாம்” எனத் தெரிவித்தார்.