Ad Widget

முல்லைத்தீவிலிருந்து காங்கேசன்துறைக்கு கரையோர வீதி அமைக்க தீர்மானம்!

முல்லைத்தீவிலிருந்து காங்கேசன்துறை வரையான கரையோர வீதி அமைக்கப்பட வேண்டும் என்கிற தீர்மானம் வடமாகாண சபையில் நேற்று ஏக மனதாக நிறைவேற்றப் பட்டது.

வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இந்த பிரேரணையை நேற்றுச் சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார்.

கிழக்கு மாகாணம் திருகோணமலையிலிருந்து கொக்கிளாய் ஆற்றினூடாக அமைக்கப்பட இருக்கும் பாலத்தினூடான கரையோரப் பாதையானது, முல்லைத்தீவு நகர் வரையிலும் பின்னர் அங்கிருந்து இரட்டை வாய்க்கால் ஊடாக சாலை வரை நீடிக்கிறது.

அங்கிருந்து சுண்டிக்குளம், கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி, மருதங்கேணி, பருத்தித் துறை ஊடாக காங்கேசன்துறை வரை பாதை அமைக்கப்பட வேண்டும். இவ்வழிகளில் ஏற்கனவே பாதைகள் இடையிடையே இருக்கின்ற போதிலும், பாலங்கள் அமைக்கப்பட வேண்டிய இடத்தில் அவை அமைக்கப்பட்டு கரையோர வீதி சீர்செய்யப்பட்டு முழுமையாக்கப்பட வேண்டும்.

இவ்வீதி அமையப்பெறும் பிரதேசங்களில் பெருமளவான மக்கள் குடியிருப்பதால் .இதன் மூலம் ஏராளமானோர் பயன் பெறுவர். இவ்வீதியானது நீண்ட தூரத்தை உள்ளடக்கியிருப்பதால் மத்திய போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின் மூலம் இப்பாதை அமைக்கப்பட வேண்டும் என்றார். ரவிகரனால் முன்வைக்கப்பட்ட இப்பிரேரணை சபையில் உறுப்பினர்களால் வரவேற்கப் பட்டு நிறைவேற்றப்பட்டது.

Related Posts