Ad Widget

முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 40 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

புனர்வாழ்வளிக்கப்பட்ட வட மாகாண முன்னாள் போராளிகள், தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்கள், மாவீரர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு 40 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண மீன்பிடி வர்த்தக வாணிப மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பாலசுப்பிரமணியம் டெனீஸ்வரன் தெரிவித்தார்.

deneeswaran

யாழிலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் புதன்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

வட மாகாணத்தில் வாழ்க்கைத்தரம் குறைந்தவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதில் உறுதியாகவுள்ளோம். அதில் இந்த மூன்று தரப்பினர்களிலும் கூடிய கவனம் செலுத்தவுள்ளோம். இவர்களுக்கு உரிய பல வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு இவர்களுடைய விவரங்கள் எமக்கு தேவைப்படுகின்றன.

9 மாகாணங்களிலும் வட மாகாணம் விசேடமாக கவனிக்கப்படவேண்டிய மாகாணம் ஆகும்.

இனத்தின் விடிவுக்காய் தமது கல்வியையும், வேலையையும் இழந்து புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் தற்போது நடுத்தெருவில் நிற்கின்றார்கள். பெண்கள் வீட்டினுள் முடங்கி கிடக்கின்றார்கள்.

மாவீரர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் வறிய நிலையில் கலாச்சார சீரழிவுக்குள் உள்ளீர்க்கப்படுகின்றார்கள்.

800க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் சிறைகளில் இருக்கின்றார்கள். இவர்களுக்கும் இவர்களின் குடும்பங்களுக்கும் மாகாண அரசாங்கத்தால் எவையும் இதுவரையில் செய்யப்படவில்லை.

இவர்கள் அனைவரின் பிரச்சினைக்கும் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட நிதியில் தொழில் முயற்சிகள், வாழ்க்கைத்தரம், கல்வி போன்ற விடயங்களை கருத்திற்கொண்டு செயற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

மீன்பிடி பண்ணை, விவசாயப் பண்ணை, வேலைவாய்ப்புக்கள், புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளுக்கு சுயதொழில் ஊக்குவிப்பு போன்றவற்றை நடைமுறைப்படுத்தவுள்ளோம்.

இந்த மூன்று தரப்பினரின் விவரங்கள் போதுமானதாகவும், விவரமானதாகவும் எம்மிடம் இல்லாத காரணத்தால் பதிவுகளை மேற்கொள்ள வேண்டிய தேவை எமக்குள்ளது.

அவர்களை ஒன்றிணைத்து போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக தவாறான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம் என இந்த அரசிடமும் புலனாய்வுத் துறையினரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.

அவர்களுக்கு எந்த வகையிலும் அச்சுறுத்தல்களை வழங்கவேண்டாம் என்பதுடன் அவர்களுக்கு கிடைக்கவிருக்கும் வாழ்வாதார உதவிகளை தடுத்து நிறுத்த வேண்டாம் என்றும் கேட்டுகொள்கிறேன்.

பணம் சம்பாதிப்பதற்காக கலாச்சார சீரழிவில் ஈடுபடுகின்ற இளையோர்களை நாம் அப்படியே விட்டுவிட முடியாது. அவர்களுக்கு உதவி செய்யாவிடின் நாம் வரலாற்று தவறிழைத்தவர்கள் ஆகிவிடுவோம்.

இந்தத் தரப்பினர்களுக்கு உதவுவதற்கு தொண்டு நிறுவனங்கள், தூதரகங்கள், தாயாராக இருக்கின்றன. எனவே இவர்களுடைய எதிர்காலத்தை வளப்படுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைக்கவேண்டும்.

வடமாகாணத்தில் 1145 கிராம அபிவிருத்தி சங்கங்களும், 1157 மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களும் உள்ளன.

இந்த சங்கங்களில் அனைத்து விபரங்களும் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொள்ள முடியும். மாவீரர் குடும்ப விபரம், புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளின் விபரம், தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் அவர்களின் குடும்பங்களில் விபரம் என 03 பிரிவுகளாக விண்ணப்படிவங்கள் இருக்கின்றன.

அந்தந்த தரப்பினர்கள், அதற்குரிய படிவங்களை பெற்று மார்ச் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் பதிவுகளை மேற்கொள்ளவேண்டும்.

எனது திணைக்களத்துக்கு இப்படிவங்கள் கிடைத்த பின்னர் 4ஆம் மாதத்திலிருந்து இவர்களுக்குரிய வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என அவர் கூறினார்.

Related Posts