Ad Widget

முன்னாள் போராளிகளின் மரணம் பாரதூரமான விடயம்; எம்.ஏ. சுமந்திரன்

முன்னாள் போராளிகளின் மரணம் பாரதூரமான விடயம் எனவும் இதனை இலகுவாக புறக்கணித்து செல்ல முடியாது எனவும் தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது.

முன்னாள் போராளிகள் அதிகளவில் மரணிப்பதாக வந்த செய்திகளை மிகவும் தீர்க்கமாக ஆராய்ந்து கொண்டிருப்பதாக தமிழரசுக் கட்சியின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பிருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில் நேற்று மாலை 6.30 மணியளவில் முடிவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் போராளிகளின் மரணம் தொடர்பிலான அடிப்படைத் தரவுகளை அறிகின்ற விடயங்களையும் சில முன்னேற்பாடான விடயங்களையும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் தலைமையில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சு எடுத்துள்ளது.

முன்னாள் போராளிகளது மரணம் தொடர்பில் செய்திகள் வந்துள்ளமையினால் அவர்களது குடும்பத்தினரும் மிகவும் உளவியல் ரீதியில் பாதிப்படைந்துள்னர்.

எனவே இது மிக அவதானமாகவும் பொறுப்போடும் நேர்த்தியாகவும் கையாளப்படவேண்டிய விடயம் எனக் குறிப்பி்ட்ட அவர்,

வெறுமனே பேச வேண்டும் என்பதற்காகவும் குற்றச்சாட்டுக்களை சுமத்த வேண்டும் என்பதற்காகவும் பொறுப்பில்லாமல் பேசி நொந்து போயுள்ள முன்னாள் போராளிகளையும் அவர்களது குடும்பங்களையும் மேலும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

முன்னாள் போராளிகளுக்கு வேண்டிய அனைத்து ஆதரவுகளையும் கொடுக்க வேண்டும் என்ற தீர்மானமும் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விசேடமாக இன்றைய அரசியல் சூழ்நிலை, அரசியல் அமைப்பு, சட்ட உருவாக்கம் மற்றும் தமிழ் பிரதேசங்களில் இயல்பு வாழ்வுக்கு மக்கள் திரும்ப முடியாதுள்ளமைக்கான பல அழுத்தமான விடயங்கள் போன்றவற்றை ஆராய்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் இறுதியில் மூன்று முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழரசுக்கட்சி போர்க்குற்ற விசாரணைகள் சர்வதேச விசாரணையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுவதாகவும் அவ்வாறான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகவும் விசமத்தனமாகவும் பொய்யாகவும் ஓரு பரப்புரை செய்யப்பட்டு வருகின்றது.

எனினும் அவ்வாறாக கட்சி ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கவில்லை. கட்சியினுடைய நிலைப்பாடாக முழுமையான சர்வதேச ஈடுபாடோடு தான் விசாரணைகள் இடம்பெறவேண்டும் என்பது தொடர்ச்சியாக இருந்து வந்துள்ளது.

இந்த நிலைப்பாட்டில் இருந்து கட்சியோ கட்சியின் உறுப்பினர்களோ மாறுபட்ட கருத்தை கொண்டிருக்கவில்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினாலே இலங்கையினுடைய முன்மொழிவோடு சேர்த்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் கட்சிக்கோ கட்சி உறுப்பினர்களுக்கோ கிடையாது என்பதனை ஏகமனதாக இணங்கியிருக்கின்றோம்.

அடுத்து அரசியல் தீர்வு சம்பந்தமாக ஒற்றையாட்சிக்குள் சமஸ்டி என்பது தான் நாம் எடுத்துள்ள நிலைப்பாடு என்று ஒரு பொய்யானதும் விசமத்தனமானதுமான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அப்படியான நிலைப்பாட்டை கட்சியோ கட்சி தலைமையோ கட்சியின் உறுப்பினர்கள் எவரேனும் எந்த காலத்திலும் எடுத்திருக்கவில்லை. சமஸ்டி அடிப்படையில் இணைந்த வடக்கு கிழக்கில் எங்களுடைய இறைமையின் அடிப்படையில் பகிரப்படுகின்ற அரச அதிகாரங்களின் மூலமாக ஒரு தீர்வு ஏற்படுத்தப்படவேண்டும் என்பதே தொடர்ச்சியாக நாம் இன்றும் கொண்டுள்ள நிலைப்பாடு அது தொடர்ந்தும் இருக்கும்.

இதை விடுத்து எந்த மாற்றுக்கருத்தும் எந்தக் காலத்திலும் எடுக்கப்படவில்லை என்பதும் நாங்கள் ஒரு தீர்மானமாக எடுத்துள்ளோம்.

இதுவரை காலமும் அரசியல் தீர்வு சம்பந்தமாகவும் மக்களின் இயல்பு வாழ்வு சம்பந்தமாகவும் இலங்கை தமிழரசுக் கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் எடுத்துள்ள நடவடிக்கைகள் எல்லாவற்றையும் ஆமோதிப்பதாகவும் ஆதரிப்பதாகவும் மத்திய செயற்குழு ஏகமனதாக தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts