Ad Widget

முன்னாள் ஆளுநர் அதிகளவான வட்டியை பெற்றார் – தவராசா

வடமாகாண முன்னாள் ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தனக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வைத்து அதிகளவான வட்டியைப் பெற்றதாக தனக்கு தகவல்கள் கிடைத்ததாக வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா குற்றஞ்சாட்டினார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் திங்கட்கிழமை (19) இடம்பெற்றது.

வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறிக்கு தனிப்பட்ட ரீதியில் ஒதுக்கப்பட்ட 6 மில்லியன் ரூபாய் நிதியை வடமாகாண பேரவைச் செயலகத்துக்கு மாற்றுவது தொடர்பான விவாதம் சபையில் இடம்பெற்றது.

இதன்போது கருத்துக்கூறுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கூறினார்.

ஆளுநர் நிதியத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் பெருமளவான வட்டியை ஆளுநர் பெற்று வந்ததாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் தனிப்பட்ட ரீதியில் ஆளுநருக்கு நிதி ஒதுக்கீடு செய்ய தேவையில்லை.

வடமாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் ஒப்பிடாமல், வடமாகாணத்துக்கான தேவைகள் என்ன, நிதி எவ்வளவு தேவை என்பது தொடர்பில் முடிவெடுத்து செயற்படவேண்டும் என்றார்.

வடமாகாண ஆளுநரின் இரத்மலானையிலுள்ள விருந்தினர் விடுதியை வடமாகாண சபை கையகப்படுத்தவேண்டும் அல்லது அங்கு வடமாகாண சபை உறுப்பினர்கள் சென்று தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யுமாறு வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன் குறிப்பிட்டார்.

தான் ஒருமுறை கொழும்புக்கு சென்ற போது, அங்கு தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், ஆளுநரின் அனுமதி பெற்றே தங்க முடியும் என அங்குள்ளவர்கள் கூறியதாக அதன்பின்னர் தான் இராமகிருஸ்ணன் மிஷனில் தங்கியதாக சி.வி.கே.சிவஞானம் குறிப்பிட்டார்.

பழைய ஆளுநர் செய்த முறைகேடுகள் மற்றும் ஊழல் தொடர்பில் ஆராயவேண்டும் என ஆளுங்கட்சி உறுப்பினர் ஆயுப் அஸ்வின் குறிப்பிட்டார்.

மக்களுக்கு சேவை செய்வதில் நாங்கள் கூடுதலான அக்கறை செலுத்தவேண்டும். கிடைத்த சந்தர்ப்பங்களில் மக்களுக்கான சேவைகள் தொடர்பில் நாங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

குறைகளை மட்டும் கூறிக்கொண்டு இருக்காமல், புதிய ஆளுநரான எச்.எம்.ஜி.எஸ்.பள்ளிகக்காரவுடன் இணைந்து நாங்கள் மக்கள் நலன் நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என ஆளுங்கட்சி உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் குறிப்பிட்டார்.

ஆளுங்கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சம்மதம் தெரிவித்ததையடுத்து, ஆளுநருக்கு ஒதுக்கப்பட்ட 6 மில்லியன் ரூபாய் நிதி பேரவைச் செயலகத்துக்கு மாற்றப்பட்டது.

2015 வரவு – செலவுத்திட்டத்தின் போது குறிப்பிடப்பட்டிருந்த ஆளுநருக்கான தனிப்பட்ட நிதியை வழங்கக்கூடாது என ஆளுங்கட்சி உறுப்பினர் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, அந்நிதி நிறுத்தி வைக்கப்பட்டு வரவு – செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts