Ad Widget

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை குறைகூறி மக்களிடம் பேச்சுவாங்கிய கூட்டமைப்பு உறுப்பினர்

தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை குறைகூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவரை பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் ஏசிய சம்பவமொன்று வியாழக்கிழமை (13) இடம்பெற்றுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம் யாழ். நகருக்கு அண்மையிலுள்ள ஒரு இடத்தில் நடைபெற்றது. இதன்போது, ‘வடமாகாண முதலமைச்சர் அண்மையில் வெளியிட்டு வரும் அறிக்கையானது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிரானதாகவும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களிக்குமாறும் கூறுவது போல இருக்கின்றதே!’ என பொதுமகன் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர், ‘சி.வி.யை வடமாகாண முதலமைச்சராக நாங்கள் கொண்டு வந்தது, அவர் நீதியரசர் என்பதற்காகவும், அவர் மீது சிங்கள மக்களுக்கு நல்ல அபிப்பிராயம் உள்ளது. அதனால் தமிழர்களின் பிரச்சினையை சிங்கள மக்களுக்கு அவர் கூறினால், சிங்கள மக்கள் அதனை ஏற்றுக்கொள்வார் என்பதற்காகவும் ஆகும்.

அவர் நடுநிலைமை வகிப்பதாகக் கூறியமை ஏன் என்று புரியவில்லை. இருந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கட்சிக்கு அவர் ஆதரவளித்திருக்க வேண்டும். அவ்வாறு அவர் செய்யாமல் விட்டது தவறு’ எனக்கூறினார்.

இதன்போது, குறுக்கிட்ட பொதுமகன், ‘முதலமைச்சரை குறைகூறாதீர்கள். உங்கள் கட்சியில் இருப்பவர்களுக்கிடையில் இருக்கும் நேர்மையின்மை, அவர்கள் மீதுள்ள அதிருப்தி மற்றும் உறுப்பினர்களுக்கு இடையில் இருக்கும் முரண்பாடுகள் காரணமாகவே அவர் அவ்வாறு கூறியிருப்பாரே தவிர, அவரிடம் குறைகள் இருக்காது. அவரைக் குறைகூறுவதை விடுத்து, உங்கள் கட்சியில் இருக்கும் பிரச்சினைகளை முதலில் தீருங்கள்’ என்றார்.

Related Posts