Ad Widget

முதலமைச்சருக்கு அதிகாரம் இல்லையேல் போராட்டம் நடத்துவோம் – தவராசா

நெல்சிப் திட்டத்தில் இடம்பெற்ற ஊழல் விடயத்தில் நடவடிக்கை எடுப்பதற்கு முதலமைச்சருக்கு அதிகாரங்கள் இல்லையென்றால் அதற்காக போராடுவதற்கு தயாராகவிருப்பதாக வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா, வியாழக்கிழமை (11) தெரிவித்தார்.

வடமாகாண சபையின் மாதாந்த விசேட அமர்வு கைதடியிலுள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற போது, நெல்சிப் திட்டத்தில் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளில், அதற்கு பொறுப்பான பொறியியலாளர் செய்த 100 மில்லியன் ரூபாய் ஊழல் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என ஆளுங்கட்சி உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரனால் பிரேரணை கொண்டு வரப்பட்டது.

இந்த பிரேரணை தொடர்பில் முதலமைச்சர் கருத்துக்கூறுகையில்,

இந்த ஊழல் நடவடிக்கையை விசாரிக்க மத்திய அரசாங்கத்தின் விசாரணைக்குழுவொன்று கடந்த 3 நாட்களாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. விசாரணை அறிக்கைகள் கிடைக்கப்பெற்ற பின்னர் மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மத்திய அரசாங்கத்தால் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை கொண்டு அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் ஊழல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளவும் மத்திய அரசாங்கத்தின் பங்களிப்பு அவசியமாகின்றது.

அத்துடன், வடமாகாண சபையாலும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன என்று தெரிவித்தார்.

பிரேரணையை வழிமொழிந்து ஆளுங்கட்சி உறுப்பினர் சிவாஜிலிங்கம் கருத்துக்கூறுகையில்,

குறிப்பிட்ட சில ஊழல்கள் நடைபெற்றதாக சந்தேகிக்கப்படும் பொறியியலாளரை ஏன் அப்போதே இடை நிறுத்தவில்லை. அவர் தற்போது நாட்டில் இல்லை. இருக்கும் போது விசாரணை செய்யாமல் நாட்டை விட்டு தப்பி சென்ற பின் விசாரணை செய்து என்ன பயன் இல்லை. இனியும் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறாமல் இருக்க, மாகாணசபையால் இடைக்கால அறிக்கை உடனடியாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

ஆளுங்கட்சி உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில்,

உள்ளுராட்சி விடயங்களை மத்திய அரசாங்கத்திடம் தெரிவிப்பது சரியானது. ஆனால் நாங்கள் கையில் எடுத்து செயற்படுத்த வேண்டும். மாகாண சபையின் செயற்பாடுகளை மாகாண சபை மேற்கொள்ளவேண்டும். மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மாகாண சபை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் முடிவெடுக்கவேண்டும். மாகாண சபைக்குரிய அதிகாரத்தை எவருக்கும் கொடுக்கவேண்டாம் என்று தெரிவித்தார்.

அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கருத்துக்கூறுகையில்,

ஊழல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு, உறுப்பினர்கள் இராமநாதர் இந்திரராசா, வேலுப்பிள்ளை சிவயோகன், அரியரட்ணம் பசுபதி ஆகியோரை உள்ளடக்கிய குழுவொன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

அந்தக்குழு, நிதி கணக்கியல் பொறுப்புக்கான மாகாண பொதுக்கணக்கு குழுவின் அதிகாரத்துக்கு உட்பட்டதாக செயற்படுகின்றது.

விசாரணைகள் மேற்கொண்டு அறிக்கைகள் தயாரித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மத்திய அரசாங்கத்தின் விசாரணைக்குழுவின் அறிக்கைகளுடன் இணைத்ததாக இந்தக்குழுவின் அறிக்கையும் இணைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்படும். மேலும் இது போன்ற ஊழல் விடயங்கள் உறுப்பினர்கள் ஊடாக தெரியவருமானால் அது தொடர்பாக ஆய்வு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த பிரேரணையும் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

Related Posts