Ad Widget

முதலமைச்சரின் நிலைப்பாட்டில், பயணிக்க தயாரானால் அவர்களுடன் இணைந்து செயலாற்றுவதற்கு நாங்கள் தயார் -தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி

வடகிழக்கு தமிழர் தாயகத்தில் நடைபெற்றது இனப்படுகொலையே என சுட்டிக்காட்டும் வகையில் வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் வரவேற்றுள்ளதுடன், முதலமைச்சரின் துணிச்சலை பாராட்டுவதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

இன்றைய தினம் மாலை யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலமைகளின் நிலைப்பாடு முதலமைச்சரின் தீர்மானத்திற்கு மாறாக இருக்கும் நிலையில், குறித்த தீர்மானத்தை துணிச்சலுடன் நிறைவேற்றியிருக்கும் முதலமைச்சர் மற்றும் வடமாகாண சபையினருக்கு எமது பாராட்டுக்களை நாங்கள் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும் குறித்த தீர்மானம் எதிர்வரும் மாதங்களில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னாயத்தம் அல்ல என்பதை நிரூபிப்பதற்கு ,நிலைப்பாடு மாறாக உள்ள கூட்டமைப்பின் தலைமைகளை நியாயப்படுத்தாமல் அவர்களை நிராகரித்து, முதலமைச்சர் அல்லது வேறு தலைமைகள் முதலமைச்சரின் நிலைப்பாட்டில், பயணிக்க தயாரானால் அவர்களுடன் இணைந்து செயலாற்றுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம்.

மேலும் குறித்த தீர்மானம் வடமாகாண சபையில் முன்னர் கொண்டுவரப்பட்டபோது முதலமைச்சரே கூறியிருந்தார். இனப்படுகொலை என கூறுவதில் சட்டச் சிக்கல்கள் இருக்கின்றன.

எனவே இனப்படுகொலைக்கு ஒப்பான என குறிப்பிடலாம் என கூறியிருந்தார். ஆனால் அந்த நிலைப்பாடுகள் அனைத்தும் மாற்றப்பட்டு இப்போது முதலமைச்சர் சுயமாக இந்த தீர்மானத்தினை கொண்டு வந்திருக்கின்றார்.

இந்த நிலையில் கூட்டமைப்பின் தலைமைகள் அரசாங்கத்தில் முழு நம்பிக்கை கொண்டிருப்பதாகவும், அதனாலேயே நாம் சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்டோம் எனவும் கூறியிருக்கின்றார்கள்.

இந்த இரு நிலைப்பாடுகளுக்குமிடையில் எமக்கு சந்தேகங்கள் எழுகின்றன. எனவேதான் நாம் இந்த தீர்மானம் தேர்தலுக்கான முன்னாயத்தம் அல்ல என்பதை நிரூபித்து முதலமைச்சரின் தலைமையின் கீழ் அல்லது வேறு தலைமையின் கீழ், முதலமைச்சர் தற்போது கொண்டுள்ள நிலைப்பாட்டின் கீழ் பயணிக்க நாம் தயார் என தெரிவிக்கின்றோம் என்றார்.

Related Posts