முச்சக்கர வண்டி சாரதிகள் பகிஸ்கரிப்பு முடிவுக்கு வந்தது

auto2யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி சாரதிகள் சிலர் பொதுமக்களுக்கு அசௌகரியத்தை உண்டு பண்ணும் வகையில் நடந்து கொள்கின்றனர் எனவே இதனை நிறுத்தக் கோரி சக முச்சக்கர வண்டி சாரதிகளினால் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டு தற்போது இரண்டு பகுதியினருக்கு இடையில் ஏற்பட்ட இணக்கப்பாட்டையடுத்து புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் முச்சக்கர வண்டி சங்கத்தின் பதிவின் கீழ் வாடகை சேவையில் ஈடுபடும் சாரதிகள் இணைந்து இந்தப் பணிப்பகிஸ்கரிப்பை யாழ்.நகரில் உள்ள முச்சக்கர வண்டி தரிப்பிடத்திற்கு முன்னால் மேற்கொண்டிருந்தனர்.

இது குறித்து சாரதிகள் தெரிவிக்கையில்,

யாழ் மாவட்டத்தில் வாடகைச் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளின் சாரதிகளாகிய நாம் பொதுமக்கள், பயணிகள் மற்றும் ஏனைய போக்குவரத்துக்கு இடையூறின்றிய வகையில் செயல்படுத்தி வருகின்றோம்.

ஆனால் ஒரு சிலர் இந்த ஒழுங்கு முறைக்கு மாறாக செயல்படுகின்றனர். இதனாலேயே நாம் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றோம். எனவே முச்சக்கர வண்டிகள் சங்கம் இதற்கான நடவடிக்கையினை விரைவில் எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் யாழ் சத்திரச் சந்தியில் உள்ள முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் சங்கத்தின்தரிப்பிட அனுமதியுடன் சேவையில் ஈடுபட்டு வரும் சாரதி ஒருவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தரிப்பிட கட்டுப்பாட்டை மீறி ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களை கூறி அடாவடித்தனமாக செயற்பட்டுவருகின்றார்.

அத்துடன் யாழ்.பஜார். வீதியில் மலாயன் கபே பகுதியில் பல ஓட்டோ சாரதிகள் எவ்வித அனுமதியும் இன்றி சேவையில் ஈடுபடுகின்றனர். இவர்கள் பயணிகளிடம் கட்டுப்பாடற்ற முறையில் கட்டணம் அறவிடுவதிலும்,போக்குவரத்திற்கு இடையூறாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

எனினும் சங்கத்தினர் பலவழிகளில் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தும் எதுவித நடவடிக்கையும் பயனழிக்காத காரணத்தினால் சங்கத்தினால் மகஜர் ஒன்று மாநகர சபை முதல்வர் உட்பட பொலிஸ் நிலையத்திற்கும் கையளிக்கப்பட்டது.

இதேவேளை இன்று மேற்கொள்ளப்பட்ட பணிப்புறக்கணிப்பினையடுத்து இரு தரப்பினரிடமும் யாழ் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் இணக்கப்பாடு காணப்பட்டதையடுத்து பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts