Ad Widget

முக்கொலை சந்தேகநபருக்கு 16 வரை விளக்கமறியல்

அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) அதிகாலை இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஜோய் மகிழ் மகாதேவா இன்று உத்தரவிட்டார்.

மேற்படி சந்தேக நபரினை பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் இன்று (05) நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய வேளையிலே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

அச்சுவேலி காதரிப்பாய் பகுதியில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் மூவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நிக்குநானந்தன் அருள்நாயகி (50), யாசோதரன் மதுசா (27), நிக்குநானந்தன் சுபாங்கன் (19) ஆகிய மூவரும் பலியாகியிருந்ததுடன், தனஞ்செயன் தர்மிகா (25), க.யசோதரன் (30) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.

தொடர்ந்து இக்கொலைகளுடன் தொடர்புடையவரென, படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தர்மிகாவின் கணவரான பொ.தனஞ்செயன் ஊரெழு பகுதியில் வைத்து கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு அச்சுவேலிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதேவேளை இந்தக் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டியினையும் பொலிஸார் கைப்பற்றியதுடன், முச்சக்கரவண்டி உரிமையாளரினையும் நேற்று (04) அச்சுவேலிப் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

இருந்தும் குறித்த முச்சக்கரவண்டி உரிமையாளரினை பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவில்லை.

தர்மிகாவின் சகோதரியும் இந்த வாள்வெட்டில் பலியாகியிருந்தவருமான மதுசாவினை இரண்டாவதாகத் திருமணம் செய்ய முடியாத நிலையிலே குறித்த நபர் (தர்மிகாவின் கணவர்) மேற்படி படுகொலையினைச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பதற்றம்

அச்சுவேலி முக்கொலை! நடந்தது என்ன?? – விளக்குகிறார் கொலையாளியின் மனைவி

அச்சுவேலியில் வாள்வெட்டு :சந்தேகநபர் இருவர் கைது

Related Posts