Ad Widget

மீளாய்வு செய்யும் வரையில் பதவிகளை பகிர்ந்தளித்தேன் : வடமாகாண முதலமைச்சர்

“மீளாய்வு செய்யும் வரையில், அமைச்சுகளின் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்காகவே, அமைச்சுகளை பகிர்ந்து வழங்கியுள்ளேன்” என்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வடமாகாண கல்வி அமைச்சர் மற்றும் விவசாய அமைச்சர் ஆகியோர், தங்களுடைய பதவிகளை இராஜினாமா செய்துள்ள நிலையில், குறித்த பணிக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்கு, கல்வி அமைச்சராக க.சர்வேஸ்வரனும் ​பெண்கள் விவகார அமைச்சராக அனந்தி சசிதரனும், எதிர்வரும் 3 மாதங்களுக்கு, தற்காலிக அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விருவரும், நேற்று (29) காலை 10 மணியளவில், வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே முன்பாக பதவியேற்றுக்கொண்டனர். இதேவேளை, விவசாய அமைச்சராக, வடமாகாண முதலமைச்சரே தொடர்ந்து கடமையாற்றவுள்ளார்.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்:-

“இது தற்காலிகமான ஏற்பாடே. நாம், எவ்வாறு எமது வேலைகளைக் கொண்டுச் செல்கின்றோம் என்பது தொடர்பாக, 3 மாத காலப்பகுதிக்குள் மீளாய்வு செய்யப்படும். அதற்காகவே இரு அமைச்சுகளையும், இருவருக்கு வழங்கியுள்ளேன்.

“மேலும், எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுடன் கலந்துரையாடியதன் பின்னரே, இது தொடர்பான மேலதிக நடவடிக்கை தொடர்பான தீர்மானத்துக்கு வரமுடியும்” என்றும் அவர் கூறினார்.

Related Posts