வடக்கில் மீன் பிடிப்பதற்கான பாஸ் நடைமுறை அமுல்படுத்தப்பட்டால் அதனைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் இன்று தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கே.சண்முகத்துடனான சந்திப்பினைத் தொடர்ந்து, வடக்கில் மீன்பிடிப்பதற்கான பாஸ் நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளதான விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து முதலமைச்சர் கூறுகையில், ‘தற்போது கடற்தொழிலுக்குச் செல்ல பாஸ் நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் என்னிடம் தெரிவித்திருக்கின்றார்கள்.
இது தொடர்பில் கடற்படையினரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது மீன்பிடிப்பதற்கு பாஸ் நடைமுறை இல்லை என்று தெரிவித்தனர். இந்த விடயம் தொடர்பில் யாழ் மாவட்ட இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேராவிடம் கலந்துரையாடியுள்ளேன்.
உண்மையில் வடபகுதியில் மீன்பிடிக்க பாஸ் நடைமுறை இருக்கிறதா? என்று ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு எமது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்.
அந்த அறிக்கை கிடைக்கப்பெற்ற பின்னர் பாஸ் நடைமுறை இருக்கும் பட்சத்தில் அதனை தடுத்து நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.