Ad Widget

மிருசுவில் கொலை வழக்கு, 27 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

judgement_court_pinaiமிருசுவிலில் 2002 டிசெம்பர் 19 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த தினத்தில் பொதுமக்கள் எட்டுபேர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு, எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

விசேட மேல்நீதிமன்ற நீதிபதி ஜே.சுரசேன (தலைவர்), லலித் ஜயசூரிய முன்னிலையிலேயே வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

இதன்போது, முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் சரத் ஜயமான, முறைப்பாட்டாளர் தரப்பு சாட்சியங்களின் தொகுப்புரையை ஆரம்பித்தார். இந்த வழக்கில் பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணி அனில் சில்வா மன்றில் ஆஜராகியிருந்தார்.

இந்த வழக்கு சாவக்கச்சேரி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

மிருசுவிலில் 2002 டிசெம்பர் 19 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த தினத்தில் இடம்பெற்ற சம்பவத்தில் குணபாலன் ரவி வீரன்,செல்லமுத்து திவகுலசிங்கம்,வில்வராசா பிரதீபன்(13), நதீரன் ஜயசந்திரன், சின்னய்யா வில்வராசா(40),கதிர்காம சந்திரன் (35), ஞானசந்திரன் சாந்தன்(15) மற்றும் விவராசா பிரசாத் ஆகியோரை படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்த சம்பவத்தில் பொன்னுதுரை மகேஷ்வரன் என்பவர் கடும் காயங்களுடன் தப்பியுள்ளார்.

சம்பவத்தையடுத்து அப்பகுதியிலுள்ள கஜபா படையணியில் கடமையாற்றிய  லெப்டினட் சேனக்க முனசிங்க, லான்ஸ் கோப்ரல்களான சுனில் ரத்நாயக்க,  ஜீ. எம்.ஜயரத்ன, கோப்ரல் காமினி முனசிங்க, படைச்சிப்பாய் புஷ்ப சமன் குமார ஆகியோர் வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பொதுமகனான மகேஷ்வரன் என்பவரை தாக்கி காயப்படுத்தல், 8 பேரை கொலை செய்தல் உட்பட 19 குற்றச்சாட்டுகள் தொடர்பில் இவர்களுக்கு எதிராக சட்ட மா அதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் 94 பேர் சாட்சியாளர்களாகவும் 41 தடயப்பொருட்களையும் சட்டமா அதிபர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கே எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பட்டுள்ளது.

Related Posts