Ad Widget

மின் கட்டணத்தை 250 வீதத்தால் உயர்த்துவதற்கு உத்தேசம்!

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் சம்பளத்தை வழங்குவதற்காக மின்சார கட்டணத்தை 250 வீதத்தால் உயர்த்துவதற்கு இலங்கை மின்சார சபை உத்தேசித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையின் அமைச்சரவை மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் (PUCSL) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ தெரிவித்தார்.

கட்டணங்கள் உயர்த்தப்படாவிட்டால், இலங்கை மின்சார சபை ஊழியர்களின் சம்பளம் பாதிக்கப்படுதுடன், பிற செயல்பாட்டு சிக்கல்கள் உருவாகும் என்று அவர் கூறினார். தற்போது, ​​இலங்கை மின்சார சபையின் வருமானம் 277 பில்லியன் ரூபாவாகும், செலவுகள் 755 பில்லியன் ரூபாவாகும்.

செலவுகளை சமாளிக்க மின்கட்டணத்தை உயர்த்துவது அவசியம் என்றார். மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் நேற்று (6) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பெர்டினாண்டோ, மின் கட்டணத்தை அதிகரிப்பது குறித்து அமைச்சரவை விரைவில் முடிவெடுக்கும் என்றார்.

கட்டணத்தை 250 வீதத்தால் அதிகரிக்க வேண்டியிருந்தாலும், மக்கள் மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதைத் தவிர்ப்பதால் அமைச்சரவை ஏற்றுக்கொள்ளாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். “இருப்பினும், தலைவர் என்ற முறையில், மின் கட்டணத்தை உயர்த்துவதை நான் ஆதரிக்கிறேன்.

ஏனென்றால், 2014க்கு பிறகு மின்கட்டண உயர்வு இல்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. ஆனால் ஆண்டுக்கு ஆண்டு கட்டணத்தை உயர்த்தியிருந்தால், மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு இவ்வளவு கடுமையாக இருந்திருக்காது.

மேலும், பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டவர்களுக்கு மின் இணைப்பை துண்டிக்கும் பணியை மீண்டும் தொடங்கினோம். இதன்மூலம், மின்சார சபைக்கு வந்திருக்க வேண்டிய பணத்தின் பெரும்பகுதியை மீளப் பெற முடியும் என நாங்கள் நம்புகிறோம்,” என்றார்.

அமைச்சர்கள் செலுத்தத் தவறிய பணத்தை மீளப்பெற முடியுமா என வினவியபோது, ​​அமைச்சர்கள் தவணை முறையில் கட்டணங்களை செலுத்த ஆரம்பித்துள்ளதாகவும், அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும் தெரிவித்தார்.

Related Posts