மிகச்சிறந்த தலைவரை இந்தியா இழந்துள்ளது – த.தே.கூ. இரங்கல்

இந்தியா தனது மிகச்சிறந்த அரசியல் தலைவரை இழந்துள்ளது என முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் மறைவு குறித்த இரங்கல் செய்தியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “முன்னாள் பாரத பிரதமரும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான வாஜ்பாய் அவர்கள் ஒரு மிகச்சிறந்த தலைவர் மட்டுமல்லாது அவரது தொலைநோக்கு தலைமைத்துவத்தின் கீழ் இந்தியா அநேக சாதனைகளை நிலைநாட்டுவதற்கும் வழிவகுத்தார்.

தனது நேர்மையான தாழ்மையுடன் கூடிய தலைமைத்துவத்தினால் இந்தியாவை வழிநடத்திய வாஜ்பாய் அவர்கள் உலகம் முழுவதுமுள்ள ஆயிரக்கணக்கான மக்களினால் நேசிக்கப்பட்ட மதிக்கப்பட்ட ஒரு தலைவராவார்.

இலங்கை வாழ் தமிழ் மக்களின் சார்பில், அவரது குடும்பத்தினருக்கும் , பாரதிய ஜனதா கட்சிக்கும், இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய மக்களிற்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts