Ad Widget

வடக்கு கிழக்கில் தற்போதும் படையினரின் ஆக்கிரமிப்பு தொடர்ந்த வண்ணமேயுள்ளது.- மாவை எம்.பி

கடந்த 18ம் திகதி மாவை எம் அவர்கள் பாராளுமன்றில் ஆற்றிய உரையின் முழுவடிவம்.

mavai2017ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது உரையில் கூறியிருந்தார். சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்ற போதும் அந்த சலுகைகளில் எவ்வாறு நடைமுறை ரீதியில் வழங்க முடியும் என்ற கேள்வி எமக்குள்ளது.

யுத்தம் நிறைவடைந்து ஏழாண்டுகள் ஆகின்ற போதும் 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் மொத்த ஒதுக்கீட்டில் 21.8சதவீதம் பாதுகாப்புச் செலவீனங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்களின் வரிப்பணத்தில் 21.8சதவீதம் பாதுகாப்புச் செலவீனங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது.

இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் கல்வி அமைச்சுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகை குறித்து நாம் வரவேற்பைத் தெரிவு செய்யமுடியும். அதேநேரம் மாகாண சபைக்கான ஒதுக்கீடுகளை பார்க்கின்ற போது அனைத்து மாகாணசபைகளுக்கும் சிறுசிறு வித்தியாசத்துடன் ஒதுக்கீடுக்ள வழங்கப்பட்டுள்ளன.

இருமாதங்களுக்கு முன்னதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நாம் சந்தித்திருந்தபோது வடக்கு கிழக்கு மாகாணங்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவையாகும். ஆகவே அந்த மாகாணங்களில் அனைத்து தேவைகளையும் கருத்திற்கொண்டு அதற்கான ஒரு மதிப்பீட்டைச்செய்து ஒருங்கிணைந்த ரீதியிலான செயற்திட்டத்தை முன்வைக்க வேண்டுமென கேட்டக்கொண்டிருந்தோம். ஆனால் அவ்வாறானதொரு செயற்பாடு மேற்கொள்ளப்படவில்லை.

வடக்கிற்கும் கிழக்கிற்கும் தனியானதொரு அபிவிருத்திச் செயற்றிட்டம் அவசியம் என எமது தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான சம்பந்தன் இந்த சபையில் வலியுறுத்தியிருந்தார். ஆகவே அந்த விடயம் தொடர்பாக அரசாங்கத்தரப்பினர் கவனம் செலுத்த வேண்டும்.

ஒட்டுமொத்தமாக இலங்கையில் 2.1வீதமானவர்கள் வறுமைக்கோட்டுக்கு உட்பட்டவர்களாக காணப்படுகின்றார்கள். இவர்களில் 1.2சதவீதமானவர்கள் 2டொலர்களுக்கும் குறைவான வாருமானத்தையே நாளொன்றுக்கு பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறிருக்கையில் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் எமது மக்களில் இலட்சக்கணக்கானவர்கள் அகதி முகாம்களிலும் நண்பர்களினுடைய வீடுகளிலும் இன்றும் வசித்து வருகின்றார்கள். அவர்கள் தமது சொந்த நிலத்தில் குடியேறுவதற்காக காத்திருக்கின்றார்கள்.

ஒரு காலத்தில் விசேடமாக வடக்கு மாகாணத்திலிருந்து மரக்கறிகள், கடலுணவுகள் என சுமார் 300 லொறிகள் நாளொன்றுக்கு தென்னிலங்கை நோக்கி வருகை தந்து விற்பனை செய்யும் நிலைமை இருந்தது. ஆனால் இன்றைய காலத்தில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

வடக்கு கிழக்கில் மீன்பிடிதுறைகள் கடற்படையினரில் பிடியில் இருக்கின்றன. பொதுமக்களின் விவசாய நிலங்கள் இராணுவத்திடம் உள்ளன. இவற்றுக்கு மேலாக தென்னிலங்கையிலிருந்து வியாபாரிகள் விற்பனை நிலையங்கள் வடக்கை ஆக்கிரமித்துள்ளன.

இவ்வாறான நிலையையினால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது மக்கள் இரண்டு டொலருக்கும் குறைவான வருமானத்தையே அதிகமாக பெறுகின்றார்கள். இந்நிலையில் மாதமொன்றுக்கு நாற்பத்தொரு ஆயிரம் ரூபா வருமானமாக பெறுகின்றார்கள் என்பதை வடக்கு கிழக்கை மையமாக வைத்து பார்க்கையில் ஏற்றுக்கொள்ள முடியாது. விசேடமாக யுத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்கள் குடும்பங்களுக்கு தலைமைத்துவத்தை தாங்கவேண்டிய துரதிஷ்டமான நிலைமைக்குள் உள்ளன.

அவர்கள் தொழில்வாய்ப்புக்களுக்காக, அன்றாட வாழ்வாதாரத்திற்காக மிகவும் கடினமான நிலைமைகளுக்குள் இருக்கின்றார்கள். அதற்காக விசேட செயற்திட்டங்களை இந்த வரவு செலவுத்திட்டத்தில் அறிமுகப்படுத்தவில்லை என்பதை இட்டு நாம் கவலை அடைகின்றோம்.

போரின் போது ஊனமுற்ற படைவீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக அரசாங்கம் உறுதிமொழிகளை வழங்குகின்றது. ஆனால் எமது பகுதிகளில் யுத்தத்தின் காரணத்தால் அவயவங்களை இழந்த ஆண்களும், பெண்களும் தமது வாழ்க்கையை கொண்டு நடத்த முடியாது திண்டாடுகின்றனர். அவர்களுக்கு அரசாங்கம் என்ன பதிலளிக்கப்போகின்றது. அவர்களுக்கு எவ்வாறான உதவிகளை வழங்கப்போகின்றது என்பது எமது கேள்வியாகின்றது.

வடக்கு கிழக்கில் தற்போதும் படையினரின் ஆக்கிரமிப்பு தொடர்ந்த வண்ணமேயுள்ளது. பௌத்தர்கள் வாழாத இடத்தில் புத்தர் சிலைகள் நிறுவப்படுகின்றன. பௌத்த விகாரகைள் அமைக்கப்படும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

குறிப்பாக எனது சொந்த பகுதியான வலி.வடக்கில் அண்மையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட பகுதியில் இந்து ஆலயம் காணப்பட்ட இடத்தில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தான் கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலும் திருகோணமலையிலும் நயினாதீவிலும் நிலைமைகள் தொடர்ந்தவண்ணமுள்ளன.

பௌத்தர்கள் வாழாத இடத்தில் ஏன் இவ்வாறான விகாரைகளும், புத்தர் சிலைகளும் என்ற கேள்வி எமது உறுப்பினர்களால் எம்மிடத்தில் கேட்கப்படுகின்றது. இதனை நல்லிணக்கம் பற்றி பேசும் அரசாங்கத்தரப்பினராகிய நீங்களே தடுத்து நிறுத்தவேண்டும்.

தற்போது மட்டக்களப்பில் ஒரு பௌத்த தேரர் மிகவும் மோசமாக இனவாதத்தை தூண்டும் வகையில் சிறுபான்மையினரை அச்சுறுத்தும் வகையில் நடக்கின்றார்கள். இதுபோன்ற செயற்பாடுகள் நிறுத்தப்படவேண்டும். இல்லாவிட்டால் மோசமான நிலைமைகள் ஏற்படுத்தப்பட்டு விடும்.

எமது கணிப்பின் பிரகாரம் யுத்ததால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றத்தை பூர்த்தி செய்வதற்கு 130, 000 வீடுகள் தேவையாகவுள்ளன. அவ்வாறிருக்கையில் 5000 வீடுகளுக்குத்தான் நிதி அமைச்சர் 2017ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கியுள்ளார்.

மறுபக்கதில் எமது மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் அக்கறை செலுத்தி வரும் நாம் தற்போதைய ஆட்சியில் உள்ள மீள்குடியேற்ற அமைச்சர் மீது நம்பிக்கையிழந்துள்ளோம். எமது மக்களின் தேவைகள் சரியாக மதிப்பிடப்படவில்லை. மீள் குடியேற்ற அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதி போதாதுள்ளது.

ஜேர்மன், ஜப்பான தூதுவர்கள் எம்மைக் சந்தித்போது அரசாங்கம் உங்களுடன் இணைந்து தான் அபிவிருத்தி மற்றும் மக்களுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றதா எனக்கேட்டனர். எமது மக்களுக்காக எம்மையும் திட்டங்களை முன்வைக்குமாறு கூறினர்.

நாட்டில் யுத்தம் இல்லை. நல்லிணக்கம் இருக்கின்றது என்ற நம்பிக்கையுடன் நாம் செயற்படுகின்றோம். வடக்கின் மீள்குடியேற்றத்திற்காக 65000 பொருத்து வீட்டுத்திட்டத்தைல வழங்குவதற்கு மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் முயற்சிக்கின்றார்.

அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை. அதில் உள்ள குறைபாடுகளை எமது உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். குறிப்பாக பாரானுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தார். நாம் மட்டுமல்ல, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கூட அத்திட்டத்தை விரும்பவில்லை. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மற்றும் பொது அமைப்புகள் கூட அத்திட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

65000 வீடுகளை 21இலட்சம் ரூபா பெறுமதியான செலவில் கட்டத்தேவையில்லை. மக்கள் அத்திட்டத்தை விரும்பவில்லை. வடக்கு கிழக்கின் பல மாவட்டங்களிலும் மக்கள் தமது எதிர்ப்புக்களை வெளியிட்டுள்ளனர். குறித்த செலவீனத்திலும் பார்க்கையில் குறைந்த செலவீனத்தில் சிமெந்தினால் வீடுகளை கட்டமுடியும்.

இரும்பிலான பொருத்து வீட்டுத்திட்டத்தை முன்னெடுக்கும் செலவீனத்தில் ஒரு இலட்சத்து 2 ஆயிரம் வீடுகளைக் கட்ட முடியும். இதனை அமைச்சர் சுவாமிநாதன் ஏன் ஏற்க மறுக்கின்றார்? பொதுமக்களுக்கு பொருத்தமற்ற பொருத்து வீடுகளை ஏற்குமாறு அமைச்சர் சுவாமிநாதன் எமது உறுப்பினர்களை தொலைபேசியில் வற்புறுத்துகின்றார். அவர் இந்த வீடுகளை ஏற்கவைப்பதற்காக ஒரு ஏஜெணட் (ஒரு முகவர்) போன்று செயற்படுகின்றார். மிகவும் கவலையளிக்கும் விடயமாகவுள்ளது.

இவ்வாறான நிலையில் நாம் மீள்குடியேற்ற அமைச்சு மீதான விவாதத்தின் நிறைவில் நடைபெறும் வாக்கெடுப்பில் அவ்வமைச்சுக்காக ஆதரவளிக்கத்தான் வேண்டுமா என்பது குறித்து ஆலோசித்து வருகின்றோம் நீண்டகாலமாக தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றை ஏற்படுத்துமாறு நாம் தொடர்ந்து போராடிவருகின்றோம். நியாயமான அரசியல் தீர்வொன்று வழங்கப்படவேண்டும் என்ற சர்வதேச சமுகத்திடம் கோரிநின்றோம். வலியுறுத்தினோம். அதன் பிரகாரம் இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டுள்ளது. இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றாக இணைந்து ஆட்சியமைத்துள்ளன. ஒற்றையாட்சிக்குள் எமது மக்கள் சுதந்திரமாக வாழ்வாதற்கான சூழல் ஏற்படுத்த முடியாது என்பதில் நாம் தெளிவாக இருக்கின்றோம். அதன் காரணத்தால் தான் சமஷ்டி முறைமையிலான தீர்வொன்று வழங்கப்படவேண்டுமென தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.

இந்த நாட்டில் கடந்த காலத்தில் 13ஆவது திருத்தச்சட்டம் இந்தியாவால் கொண்டவரப்பட்ட போதும் அதனை அடிப்படையாக வைத்துக்கொண்டு தமிழர்களுக்கு நியாயமான தீர்வை வழங்குவதற்காக முன்னோக்கிச் செல்லவேண்டுமென்றே கூறப்பட்டது.

அதனைத்தொடர்ந்து சந்திரிகா அம்மையாரின் காலத்தில் கலாநிதி நீலன் திருச்செல்வமும் தற்போது திசைமாறிப்போயுள்ள பேராசிரியர் ஜி.எல்.பீரீஸ் இணைந்து பிராந்தியங்களின் ஒன்றியம் என்றவகையில் அதிகாரங்களை பகிரப்பட்ட தீர்வு திட்ட வரைபொன்றை கொண்டுவந்தார்கள். அதனை ஐக்கிய தேசியக் கட்சியினர் எதிர்த்தார்கள்.

தற்போது நல்ல சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. எமது மக்களின் கோரிக்கைகள் ஆட்சியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் பிரகாரமே எமது மக்கள் அவர்களுக்கான ஆணையை வழங்கினார்கள். அதன் காரணத்தால் நாம் தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வருகின்றோம்.

எமது மக்கள் சுதந்திரமாக நிரந்தர பாதுகாப்போடும் வாழ்வதற்காக இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்றை புதிய அரசியலமைப்பின் ஊடாக வழங்வேண்டும். அதுவே எமது நம்பிக்கை. அரசியலமைப்பின் வழிநடத்தும் குழுவின் உபகுழுக்களின் முக்கிய ஆறு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன. அதில் எமக்கு பாரிய எதிர்பார்ப்புக்கள் உள்ளன.

எமக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படாத நிலையில் எவ்வாறு வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவளிப்பது என எமது உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினார்கள். இருப்பினும் தற்போது ஏற்பட்ட சந்தர்ப்பதை பயன்படுத்தி எமது மக்களின் அரசியல் உரிமைகள் வென்றெடுக்கப்படவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே நாம் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளோம். தேசிய அசரங்கத்தின் மீது எமக்கு இன்னமும் நம்பிக்கை உள்ளது.

அதேபோன்று எமது மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுகின்றபோது எமது சகோதர இனமான முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு அவர்களுக்கான அரசியல் உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். அவர்களுடன் இணைந்து உரிமைகளை வென்றெடுப்பதற்கான அந்த மக்களின் தலைவர்களுடன் நாம் பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டிருக்கின்றோம். அரசாங்கம் நீதியாக செயற்பட்டு எமது விடயங்களுக்காக நியாயமான தீர்வொன்று கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

Related Posts