Ad Widget

மாவீரர் துயிலும் இல்லங்கள் மீள்புனரமைப்பு! உயர்மட்டத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல என கூட்டமைப்பு

கிளிநொச்சி- கனகபுரம் மாவீரர் துயிலுமில்ல வளாகத்தை துப்புரவு செய்வதற்கு கரைச்சி பிரதேச சபையில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தமிழ்தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல என கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து பிரதேச சபையிடம் கூட்டமைப்பின் உயர்மட்டம் விளக்கம்கோரும் எனவும் தெரிவித்திருக்கின்றன.

மேற்படி பிரதேச சபையில் 17உறுப்பினர்களினால் இந்த தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டிருந்த நிலையில், அந்த தீர்மானத்திற்கமைவாக இன்று காலை துயிலுமில்லத்தை புனரமைப்பதற்கு பிரதேச சபை நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் கனகபுரம் பகுதியில் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இந்நிலையில் கூட்டமைப்பு இவ்விடயம் தொடர்பில் சில உள்ளுர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருக்கையில்,

இந்த தீர்மானம் எடுக்கப்பட்டமை தொடர்பாகவும், அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் கட்சியின் உயர் மட்டத்தினருடன் கலந்து பேசப்படவில்லை.

மேலும் அந்த மாவட்டத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினருடனும் இந்த விடயம் குறித்து எதுவும் பேசப்படாத நிலையில் மிக அவசர அவசரமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பிரதேச மக்கள் மிகவும் அச்சமடைந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கும் கூட்டமைப்பினர் மக்களை அச்சுறுத்தும் வகையில் எதனையும் செய்யவேண்டாம் எனவும், உணர்வுகள் சகலருக்கும் இருக்கும் நிலையில் அதனை சாதகமான வழியில் அதற்குரிய காலத்தில் நிறைவேற்றிக் கொள்ளவேண்டுமே தவிர அவசர அவசரமாக தீர்மானங்களை எடுத்து அனைவரையும் அசௌகரியத்திற்குள் ஆழ்த்துதல் மிகவும் வருத்தத்திற்குரியது எனவும் சுட்டிக்காட்டியுள்ளன.

மேலும் இவ்வாறான சம்பவங்களை வைத்துக் கொண்டு தென்னிலங்கை இனவாதிகள் வயிறுவளர்க்கவும், படையினர் துயிலுமில்லங்களை நிரந்தரமாக ஆக்கிரமித்து அநாகரிக்கப்படுத்தவும் எங்களிடமுள்ள ஆர்வக்கோளாறான விடயங்கள் சாதகமாக அமைந்துவிடக் கூடாதெனவும் கூட்டமைப்பு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Related Posts