Ad Widget

மாவீரர்களைப் பொது இடங்களில் நினைவுகூர முடியாது! மீறினால் சட்ட நடவடிக்கையாம்!!

“தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாகும். எனவே, பொது இடங்களில் மரணித்த புலிகளை நினைவுகூருவது, புலிகளை நினைவுகூரும் சுவரொட்டிகளை ஒட்டுவது சட்டத்துக்கு எதிரானதாகும். இது தொடர்பில் பொலிஸார் அவதானத்துடன் இருக்கின்றனர். சட்டத்துக்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” – இவ்வாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

“வடக்கு, கிழக்குப் பகுதிகளில் நாளை மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளதுதானே?” என்று அவரிடம் வினவியபோதே, “எமக்கு அவ்வாறு தகவல் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், மூன்று, நான்கு நாட்களுக்கு முன்னர் வவுனியாவில் மரணித்த புலிகளை நினைவுகூரும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதை நீக்க நடவடிக்கை எடுத்தோம். யாழ். பல்கலைக்கழகத்திலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததாகத் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. எனினும், இதனை எம்மால் உறுதிப்படுத்தமுடியாது.

ஏனெனில், பல்கலைக்கழகத்துக்குள் நாம் செல்வதில்லையே. எது எப்படியிருப்பினும், பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டமுடியாது. அப்படி ஒட்டப்பட்டால் அதை நாம் அகற்றுவோம். ஒட்டுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம்” – என்றார்.

மேலும் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் வழங்கிய பதில்களும் வருமாறு:

கேள்வி: மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க இடமளிக்கவேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளதே?

பதில்: அரசு இதுவரை அவ்வாறானதொரு தீர்மானத்தை எடுக்கவில்லையே. சட்டத்துக்கு விரோதமானதெனில் நாம் அதற்கு இடமளிக்கமாட்டோம். பொது இடங்களில் இவ்வாறு நினைவுகூருவது சட்டவிரோதமானதாகும். ஆனால், நாடாளுமன்றத்தில் அனுமதி வழங்கப்படுவது என்பது வேறு கதை. நாடாளுமன்றம் குறித்து என்னால் கருத்துக் கூறமுடியாது. இதற்கு தற்போது எந்தவிதமான சட்ட ஏற்பாடுகளும் இல்லை.

கேள்வி: தனிப்பட்ட முறையில் வீடுகளில் அஞ்சலி செலுத்த முடியுமா?
பதில்: அதாவது, இறந்த ஒருவருக்கு தனிப்பட்ட முறையில் ஒருவர் வீட்டில் அஞ்சலி செலுத்துவாராயின், அதில் எமக்குத் தலையிட முடியாது.

கேள்வி: புலிகளாக இருந்தாலும் பிரச்சினை இல்லையா?
பதில்: வீட்டில் ஒருவர் அஞ்சலி செலுத்துவராயின் அது எமக்குத் தெரியாதே. தகவல் வராதே. செயற்பாட்டு ரீதியில் அது எமக்கு கடினமாகப் போகும்.

கேள்வி: அப்படியானால், ஏனையோருக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அஞ்சலி செலுத்தலாமா?
பதில்: பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், பொது இடங்களில் அது முடியாது. செயற்பாட்டு ரீதியில் எம்மால் தேடிக்கொண்டிருக்க முடியாதே. புலிகள் என்பது இன்னும் பயங்கரவாத அமைப்புதானே.

கேள்வி: நினைவுகூரப்பட்டால் பொலிஸார் மேற்கொள்ளும் நடவடிக்கை என்ன?
பதில்: நாம் இது குறித்து அவதானத்துடன் இருக்கின்றோம். சட்டத்துக்கு எதிராக செயற்படமுடியாது.

கேள்வி: மரணித்த புலிகளை அவர்களின் உறவுகள் நினைவுகூருவது சட்டவிரோதமானதா?
பதில்: சட்டவிரோதமானதுதானே. இன்றுவரை சட்டத்துக்கு எதிரானது. எதிர்காலத்தில் மாற்றம் வருமா என்று எனக்குத் தெரியாது – என்றார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்.

இதேவேளை, மாவீரர் நாள் தொடர்பில் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீரவிடம் தொடர்புகொண்டு வினவியபோது, “இது குறித்து பொலிஸாரிடமே நீங்கள் வினவவேண்டும். ஏனெனில், சிவில் சட்டம் முழுமையாக அமுலில் உள்ளது” – என்றார்.

Related Posts