Ad Widget

மாகாண சபையின் அனுமதி இல்லாமல் மண்டைதீவில் பாரிய உல்லாச விடுதி

மண்டைதீவில் 37 மாடிகளைக் கொண்ட பாரிய உல்லாச விடுதியொன்றை நிர்மாணிப்பதற்காக நிலத்தை சமன் செய்யும் பணிகள் ஆரம்பித்திருக்கும் நிலையில், அவற்றை இடைநிறுத்தியுள்ள வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அனுமதி இல்லாமல் கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்க வேண்டாம் எனவும் உரிய தரப்புகளிடம் அறிவுறுத்தியிருக்கிறார்.

8

 
மண்டைதீவு எட்டாம் வட்டாரத்தில் கடற்கரைக்குச் சமீபமாக 25 ஹெக்டெயர் அரச காணியில் அல் அம்மான் குழுமம் என்னும் பன்னாட்டு நிறுவனம் 37 அடுக்கு மாடிகளில் பாரிய உல்லாச விடுதியொன்றை நிறுவுவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது. கடந்த சில தினங்களாக கனரக இயந்திரங்களின் மூலம் நிலத்தைத் துப்பரவு செய்து சமப்படுத்தும் வேலைகள் இடம்பெற்று வருகின்றன.

 
இது தொடர்பாக பிரதேசவாசிகள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனுக்கும் வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கும் தெரிவித்ததையடுத்து இருவரும் இன்று செவ்வாய்க்கிழமை (19.05.2015) அப்பகுதிக்குச் சென்றிருந்தனர். இதன்போதே, அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அல் அம்மான் நிறுவனத்தின் மேற்பார்வையாளராக பணியில் இருந்த அன்வர் உசேனிடம் நிலத்தை சமன் செய்யும் பணிகளைத் தொடர வேண்டாம் எனவும் உரிய அனுமதி இல்லாமல் கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

 
இது தொடர்பாக அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஊடகங்களிடம் குறிப்பிடுகையில்,
வடக்கின் சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கு வடக்கு மாகாண சபை ஒருபோதும் தடையாக இராது. ஆனால், சுற்றுலாத்துறை எமது மக்களின் பண்பாட்டுச் சூழலுக்கும், இயற்கைச் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும் என்பதில் நாம் மிகவும் கவனமாக இருக்கிறோம். மண்டைதீவில் அமைக்கப்பட இருக்கும் 37 மாடிகளையும் நிலத்தடியிலுள்ள சுண்ணாம்புப்பாறை தாங்குமா என்பது குறித்து விரிவாக ஆராயப்பட வேண்டும். இந்தச் சுற்றுலா விடுதிக்கு இதுவரையில் மத்திய சுற்றாடல் அதிகார சபையிடம் இருந்து அனுமதி பெறப்படவில்லை. மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் வடக்குக்கான பணிப்பாளரிடம் இது தொடர்பாக நான் கேட்டபோது, இவ்வாறான ஒரு விடுதி கட்டப்படுவது பற்றியே அவர் தெரிந்திருக்கவில்லை.

 
அதுமாத்திரம் அல்ல, மாகாண சபைக்கும் இது தொடர்பாக எதுவுமே தெரியாது. அரச காணியாக இருந்தாலும் அதனை ஒரு நிறுவனத்துக்கு வழங்குவதற்கு மாகாணத்தின் காணி அமைச்சர் என்ற வகையில் எமது முதலமைச்சரிடமும் ஒப்புதல் பெறப்பட வேண்டும். ஆனால், இந்த அனுமதிகள் எதுவும் இல்லாமலேயே நிலத்தில் உல்லாச விடுதியை அமைப்பதற்கான பணிகள் அல் அம்மான் குழுவினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவை போன்ற விதிமுறை மீறல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

Related Posts