Ad Widget

‘மாகாணசபைகளை இணைக்கும் அதிகாரம் இனி ஜனாதிபதிக்கு கிடையாது’ -அமைச்சரவை

இலங்கையில் இருக்கும் மாகாணசபைகளை தேவைப்படும் பட்சத்தில் இணைப்பதற்கு இலங்கை ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தை ரத்துச் செய்வதென இலங்கை அரசின் அமைச்சரவை முடிவு செய்திருக்கிறது.இலங்கை அரசியலமைப்பின் மாகாணசபை முறைமை உள்ளடக்கிய 13வது திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஏனைய திருத்தங்கள் குறித்து ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்ற அமைப்பது என்றும் அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 மாகாணசபைகளுக்கான காணி, பொலிஸ் அதிகாரங்கள் போன்ற சர்ச்சைக்குரிய விடயங்களையும் இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஆராயும்.இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பதற்கான கோரிக்கையை எதிர்வரும் செவ்வாய்கிழமை, ஜூன் 18ஆம் திகதி இலங்கை நாடாளுமன்ற சபாநாயகரிடம் அரசாங்கம் முன்வைக்கும்.

இலங்கை அரசின் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாரந்தரச் செய்தியாளர் சந்திப்பின் போது இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெகலிய ரம்புக்வெல அவர்கள் இதனை அறிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் வரக்கூடிய ஜனாதிபதிகள் கூட தமிழர்களின் தாயகமாக கொள்ளப்படும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பதற்கான வாய்ப்புக்களை அமைச்சரவையின் இந்த தீர்மானம் இல்லாமல் செய்வதாக ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

-BBC

Related Posts