Ad Widget

மாகாணசபைகளுக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா

மாகாணசபைகளுக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். அத்துடன் 13ம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.மாகாணசபைகளுக்கு வழங்கப்பட வேண்டிய அதிகாரங்கள் வழங்கப்படும் என ஜனாதிபதி அண்மையில் குறிப்பிட்டிருந்தார். அரசியல் கட்சி என்ற ரீதியில் மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

அதிகாரப் பகிர்வு என்பது நாட்டை பிளவுபடுத்துவதாக அமையாது. அது நாட்டை பாதுகாப்பதாகவே அமையும்.கடந்த கால அரசாங்கங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை.

இந்த அரசாங்கம் குறித்த பிரதேசங்களில் அபிவிருத்தியை ஏற்படுத்த ஆர்வம் காட்டுகின்றது. தேர்தல் காலங்களில் மட்டுமன்றி சாதாரண நேரங்களிலும் பிரதேசங்களின் அபிவிருத்திக்காக அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியமானது. யாரேனும் அவர்களை விடவும் நாம் உயர்ந்தவர்கள் என நினைத்தால் அது பிழையானது.

அனைவரும் சமாமானவர்கள் என்ற நிலைப்பாட்டின் அடிப்படையில் செயற்பட வேண்டியது முக்கியமானது. போர் வெற்றியை அர்த்தமுள்ளதாக மாற்ற வேண்டுமாயின் சிங்கள, தமிழ் மக்களுக்கு இடையில் நிஜமான நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

சிங்கள மக்களுக்கு மட்டும் ஜனாதிபதியல்ல. நாட்டு மக்கள் அனைவருக்கும் தாம் ஜனாதிபதி என அண்மையில் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். இது பாராட்டப்பட வேண்டியதாகும்.வடக்கு தேர்தலில் வெற்றியீட்டும் நோக்கில் அரசாங்கம் தேர்தலை காலம் தாழ்த்தவில்லை.

வடக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாக அமைந்துள்ளது. இதேவேளை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனவாத அடிப்படையில் செயற்பட்டு வருகின்றது.

கிழக்கு மாகாணத்தில் குழப்ப நிலைமையை ஏற்படுத்த வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கமாக அமைந்திருந்தது.

தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமன்றி ஐக்கிய தேசியக் கட்சியும் குறுகிய அரசியல் நோக்கத்துடன் செயற்படுகின்றது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts