Ad Widget

மஹிந்தவின் கோரிக்கைப்படி கே.பிக்குக் கூட பாதுகாப்பு வழங்கியுள்ளோம்!

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் கோரிக்கையின் பிரகாரம் புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினராக இருந்த கே.பிக்கும் போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது” எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றம் நேற்றுப் பிற்பகல் ஒரு மணிக்கு பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுத் தாக்கல், வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்று ஆகியன முடிவடைந்த பின்னர் தினேஷ் குணவர்தன எம்.பி. நேற்றுமுன்தினம் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு பிரதமர் நேற்றும் பதிலளித்தார்.

நிலையியற் கட்டளைச் சட்டத்தின் 23/2இன்கீழ் விசேட கூற்றொன்றை விடுத்து முன்னாள் ஜனாதிபதிக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி தினேஷ் குணவர்தன எம்.பி. வினாக்களைத் தொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றுக்கு பதிலளிக்கையிலேயே மேற்படி தகவலையும் பிரதமர் வெளியிட்டார்.

“முன்னாள் ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வ இல்லத்தை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதை விரைவில் பெற்றுத்தருவது தொடர்பில் நான் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்துவேன். ஆனால், மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதிக்குரிய மாளிகையை கேட்காமல் இருந்தால் சரி. அத்துடன், மஹிந்தவுக்குப் போதுமான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.உயர் பாதுகாப்புடைய வாகனம் கூட வழங்கப்பட்டுள்ளது. அது ஜனாதிபதியிடமோ அல்லது என்னிடமோ கூட இல்லை.

தேர்தலில் அவர் வேட்பாளராகக் களமிறங்கக்கூடும். அப்போது மேலும் பாதுகாப்பை வழங்குவதற்கு அரசு தயாராகவே இருக்கிறது. இதேவேளை, முன்னாள் ஜனாதிபதிக்கு புலிகளால் உயிர் அச்சுறுத்தல் என அவரது தரப்பால் கூறப்படுகிறது. ஆனால், அவரின் கோரிக்கைப்படி நாம் கே.பிக்கும் பாதுகாப்பு வழங்கியுள்ளோம்” – என்றார்.

Related Posts