Ad Widget

மற்றுமொரு வெள்ளைவான் சம்பவத்தால் அரசியல் களத்தில் பெரும் சர்ச்சை!

மிரிஹான வெள்ளைவான் சம்பவமானது இலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை மற்றுமொரு வெள்ளைவான் சம்பவம் இடம்பெற்றுள்ளமையானது அரசியல் களத்தைப் பெரும் பரபரப்பாக்கியுள்ளது.

இராணுவ இலக்கத் தகடு பொருத்தப்பட்ட வெள்ளை வாகனமொன்றிலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் வீரகுமார திஸாநாயக்கவின் சுவரொட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.

இராணுவ இலக்கத் தகடு மற்றும் பிறிதொரு இலக்கத் தகடு பொறிக்கப்பட்ட வெள்ளை வான் ஒன்று கெபதிகொல்லாவ, கொன்கொல்லாவ பிரதேசத்தில் வைத்து நேற்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.

இந்த வெள்ளை வானில் அநுராதபுரம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர் ஒருவரின் 4 ஆயிரத்து 500 போஸ்டர்கள் மீட்கப்பட்டுள்ளன எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரம் பரகஸ்வெவ பகுதியில் வசிக்கும் ஒருவரது பெயரில் குறித்த வான் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இராணுவ இலக்கத் தகடு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மிரிஹான வெள்ளைவான் சம்பவத்தை எதிரணி உறுப்பினர்கள் அரசியல் பரப்புரையாக மாற்றியுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவையும் பாதுகாப்புச் செயலாளர் பதவியை வகித்த கோட்டாபய ராஜபக்‌ஷவையும் கொலை செய்யும் நோக்கிலேயே இவ்வாறானதொரு திட்டம் தீட்டப்பட்டுள்ளது என விமல் வீரவன்ஸ குற்றஞ்சாட்டி வருகின்றார்.

இந்நிலையில், அவரது கட்சி உறுப்பினரான வீரகுமார திஸாநாயக்கவின் போஸ்டர்களே வெள்ளைவானிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. எனவே, அரசியல் பிரசாரங்களுக்காகவும் வாக்குவேட்டை நடத்துவதற்காகவும் இவ்வாறு வெள்ளைவான் புரளிகளை மக்கள் மத்தியில் பரப்புவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர் என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Related Posts