Ad Widget

மருத்துவரைச் சந்திக்கும் பொழுது

நீங்கள் மருத்துவரைச் சந்திக்கும் பொழுது சில விடயங்களைத் தெரிந்து வைத்திருப்பீர்களாக இருந்தால் அது உங்களுக்கு மிகவும் பயனுடையதாக இருப்பதுடன் அநாவசிய தாமதம், அலைச்சல், செலவு என்பவற்றைக் குறைத்துக் கொள்ளவும் உறுதுணையாக இருக்கும்.

meet-doctor

உங்கள் மருத்துவம் சம்பந்தமான குறிப்புகள் துண்டுகள், புத்தகங்கள், சோதனை முடிவுகள் அனைத்தயும் ஒரு பைல் கவரில் அல்லது பை ஒன்றில் போட்டு பாதுகாப்பாக வைத்திருங்கள். வைத்தியரைச் சந்திக்கும் பொழுது அவை அனைத்தயும் உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். அவை உங்களுக்குப் பொருத்தமான மருத்துவப் பராமரிப்பை தீர்மானிப்பதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். இவற்றை எடுத்துச் செல்ல நீங்கள் தவறினால் உங்களுக்குப் பொருத்தமான சிகிச்சையை ஆரம்பிப்பதில் தாமதங்கள் ஏற்படலாம். சில முக்கியமான ஆவணங்களை போட்டோ பிரதி எடுத்து வைத்துக் கொள்வது உங்கள் மருத்துவ தகவல்கள் தொலையும் சந்தர்ப்பங்களில் மிகவும் பயனுடையதாக அமையும்.

வைத்தியர் சோதிக்கும் கருவியை (ஸ்ரெதஸ்கோப்) காதில் மாட்டியிருக்கும் பொழுது அவருடன் பேசுவதைத் தவிர்த்தல் வேண்டும். காரணம் அந்தச் சந்தர்ப்பத்தில் நீங்கள் கதைப்பது வைத்தியருக்கு கேட்காது. நீங்கள் கதைத்துக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் இந்தக் கருவியினால் உங்களை சோதித்துப் பார்ப்பதும் கடினமாக இருக்கும். எனவே வைத்தியர் காதில் ஸ்ரெதஸ்கோப் மாட்டியிருக்கும் நேரத்தில் வைத்தியருடன் கதைப்பதை தவிர்த்துக் கொள்வது அவசியமாகும்.

உங்களுடைய நோய் நிலை சம்பந்தமாக நீங்களே வைத்தியருக்கு விபரிப்பது நல்லது. உங்களுக்கு இருக்கும் உண்மையான சரியான அறிகுறிகளை உங்களால் மட்டுமே முழுமையாக விவரிக்க முடியும். அதாவது ஒரு நோயாளியின் நோய் நிலை சம்பந்தமாக அவரின் குடும்ப உறுப்பினர்கள் விவரிப்பதிலும் பார்க்க அந்த நோயாளியே நேரடியாக வைத்தியருக்கு சொல்வது சிறந்தது. நோயாளிக்கு பேசும் ஆற்றலில் அல்லது சிந்திக்கும் ஆற்றலில் தடுமாற்றங்கள் இருந்தால் அல்லது மயக்க நிலை, வலிப்பு நிலை ஏற்பட்டால் குடும்ப உறுப்பினர்கள் அவரின் நிலை சம்பந்தமாக விவரிக்க வேண்டிய தேவை ஏற்படலாம்.

நீங்கள் பாவித்துக் கொண்டிருக்கும் மாத்திரைகளின் பெயர்களை அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். மாத்திரைகளின் நிறத்தையும், வடிவத்தையும் சொல்லி அதனை அடையாளப்படுத்த முனைவது சில சமயம் ஆபத்திலும் முடியலாம். ஒவ்வொரு வகையான மாத்திரைகளும் பல்வேறுபட்ட வடிவங்களிலும், நிறங்களிலும் உற்பத்தி செய்யப்படுகின்றன. எனவே நீங்கள் குறிப்பிடும் வடிவத்தையும் நிறத்தையும் வைத்து நீங்கள் என்ன மாத்திரை பாவித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை வைத்தியரினால் கண்டறிவது சிரமம். எனவே ஒவ்வொருவரும் தாம் பாவிக்கும் மாத்திரைகளின் பெயர்களைத் தெரிந்து வைத்திருப்பது மிகவும் பயனுடையதாகும்.

வைத்தியரைச் சந்திக்கும் போது உங்கள் நோய் நிலை சம்பந்தமான எல்லாத் தகவல்களையும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். உதாரணமாக உங்களுக்கு என்ன நோய்கள் இருக்கின்றன? உங்கள் குருதி அமுக்கம் எவ்வளவு?, ஒவ்வொரு மாத்திரைகளும் எதற்க்காக தரப்படுகின்றன?, அவற்றின் பெயர் என்ன?, செய்யப்பட்ட சோதனையின் முடிவு என்ன?, உங்கள் உணவு முறை எப்படி அமைய வேண்டும்?, நீங்கள் என்ன வகையான உடற்பயிற்சிகள் செய்ய முடியும்?, போன்ற வினாக்களுக்குகான விடைகளைத் தெரிந்து கொள்வது உங்களது உரிமையும் கடமையுமாகும்.

வைத்தியரைச் சந்திக்க செல்லும் போது எந்த நோய் நிலைக்காக வைத்தியரைச் சந்திக்க செல்கிறீர்களோ அந்த நோயுடன் தொடர்புடைய வைத்தியரைச் சந்தித்து சிகிச்சை பெற்றுக்கொள்வது சிறந்தது. சிறிய மருத்துவப் பிரச்சினைகளுக்கும் மருத்துவ நிபுணரை சந்திக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உங்கள் வீட்டின் அருகில் உள்ள அரசாங்க வைத்தியசாலையில் வைத்தியரை சந்தியுங்கள். தேவை ஏற்படின் மேலதிக சிகிச்சைக்கான ஒழுங்குகளை அந்த வைத்தியர் செய்து தருவார்.

உங்கள் நோய் நிலை சம்பந்தமாக உங்களுக்கு ஏதாவது சந்தேகம் அல்லது பயம் அல்லது நேரடியாக வைத்தியருடன் கதைப்பதில் தயக்கம் இருப்பின் உதவியாளர் ஒருவரை அழைத்துச் செல்வது நல்லது. நீங்கள் ஒவ்வொரு தடவையும் வைத்தியரை சந்திக்கச் செல்லும் போதும் அதே உதவியாளரை அழைத்துச் செல்வது நல்லது.

வைத்தியர் கூறும் மருந்துகளை பாவிப்பதற்கு உங்களுக்கு விருப்பமிலையானால் நீங்கள் அதனை வைத்தியரிடம் தெரிவித்து அதற்கான மாற்று வழிகளை அறிந்து கொள்ள முடியும்.

வைத்தியர் கூறும் சிகிச்சை முறைகளையும் ஆலோசனைகளையும் ஏற்றுக் கொள்வது உங்களுக்கு கஷ்டமாக இருந்தால் அதனை திறந்த மனத்துடன் வைத்தியருக்கு நீங்கள் தெரியப்படுத்த முடியும்.

வைத்தியர் உங்களுக்கு கூறுவது ஆலோசனையே தவிர உத்தரவு அல்ல. உங்களுடைய விருப்பத்திற்கு அமைவாகவும் உங்களின் அனுமதியுடன் மட்டுமே சிகிச்சை முறை இறுதியில் வடிவமைக்கப்படும். எனவே வைத்தியரின் ஆலோசனையைக் கேட்டபின் உங்களது விருப்பத்தையும் தீர்மானத்தையும் வைத்தியருக்கு தெரியப்படுத்துவது உங்களது உரிமையும் கடமையும் ஆகும்.

வைத்தியர் பருந்துரைக்காத மருந்துகளை பாவித்தல் கூடாது. அத்துடன் மருந்துகளை மருந்தகங்களில் வாங்கும் போது அதனைப் பாவிக்கும் முறை பற்றியும் கேட்டறிதல் வேண்டும். மருந்து காலாவதியாகும் திகதியையும் பார்த்து வாங்குதல் வேண்டும்.

ஒருவருக்கு சிக்கலான நோய் நிலை ஒன்று ஏற்பட்டு விட்டால் அவரின் உண்மையான உடல் நிலையையும் அவருக்கு ஏற்படக்கூடிய மற்றய பாதிப்புகளையும் அந்த நோயாளிக்கு தெரியப்படுத்த வேண்டிய கடமை ஒவ்வொரு மருத்துவருக்கும் இருக்கிறது. ஆனால் இந்தக் கடுமையான நோய் நிலை சம்பந்தமாக நோயாளிக்கு தெரியப்படுத்துவதில் சிக்கல்களும் இருக்கின்றன. ஆனாலும் நோயாளியின் மன நிலையையும் பொருத்தமா தருணத்தையும் அறிந்து நோயாளிக்கு அல்லது நோயாளியின் நெருங்கிய உறவினர்களுக்கு இது பற்றி வைத்தியரால் கூறப்படும். உங்களது மருத்துவநிலை சம்பந்தமான பூரணமான நிலைமையை தெரிந்து கொள்ள நீங்கள் விருப்பப்படாதவிடத்து அதனை வைத்தியருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

உங்களுக்கு இருக்கும் அறிகுறிகளை கூட்டியோ மறைத்தோ, அல்லது குறைத்தோ வைத்தியருக்கு தெரியப்படுத்தினால் அது உங்கள் வைத்திய முறையில் பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே வைத்தியரை உங்கள் நண்பராக கருதி உண்மை நிலையை அவருக்கு தெரியப்படுத்துவது நல்லது. உங்களது மருத்துவத் தகவல்களின் இரகசியத்தனமை எப்பொழுதும் வைத்தியர்களால் பேணப்படும்.

சி.சிவன்சுதன்.
பொது வைத்திய நிபுணர்.
யாழ் போதனா வைத்தியசாலை.

 

மேலும் கட்டுரைகளுக்கு…

Related Posts