Ad Widget

மயிலிட்டியை இராணுவம் கைவிடக் கூடாது!

எந்தவொரு சூழ்நிலையிலும் வலி.வடக்கில் அமைந்துள்ள மயிலிட்டியை பொதுமக்களிடம் கையளிக்கக்கூடாது எனவும் அங்கு மீள்குடியேற்றம் செய்வதற்கு அனுமதிக்கக்கூடாது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தேசிய போர் வீரர்கள் முன்னணி என்ற முன்னாள் படை அதிகாரிகளின் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த புதன்கிழமை இந்த அமைப்பைச் சேர்ந்த படையதிகாரிகள் குழுவொன்று இரண்டு மணிநேரமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது.

இந்தக் குழுவில் மேஜர் ஜெனரல் குமார் ஹேரத், கேணல் ரித்திகஹபொல, மேஜர் அர்ஜூன டி சில்வா, உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பின்போது புதிய அரசியலமைப்பினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமெனவும், தேசிய பாதுகாப்பு விடயத்தில் விட்டுக்கொடுப்பின்றிச் செயற்படுமாறும் குறித்த அமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தியுள்ளது.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக கருத்து வெளியிட்ட ரியர் அட்மிரல் சரத் வீரசேகர,

தீவிரவாதிகளுக்கு சிறிலங்கா அதிபர் பொதுமன்னிப்பு அளித்துள்ள நிலையில், மிருசுவிலில் 2000ஆம் ஆண்டு 8 பொதுமக்களைப் படுகொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்ட சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஸ்ராவ் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கும், சிறிலங்கா அதிபரின் பொது மன்னிப்பு அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.

ஜெனிவாவின் வழிநடத்தலில், காணாமற்போனோர் செயலகத்தை உருவாக்குவது ஆபத்தானது. இதற்கான செயல்முறைகளை தடுத்து நிறுத்தி, சிறிலங்காவுக்கு எதிரான நிகழ்ச்சி நிரலை முறியடிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளோம்.

விடுதலைப் புலிகளின் போராளிகளை நினைவு கூர அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை, போர் வெற்றி நாள் அணிவகுப்பை நிறுத்தியுள்ளது குறித்தும் முறைப்பாடு செய்தோம். தீவிரவாதிகளை நினைவு கூர எந்த நாடும் அனுமதிப்பதில்லை என்றும், வெற்றியை நினைவு கூரும் உரிமை இராணுவத்துக்கு உள்ளது என்றும் சிறிலங்கா அதிபரிடம் வலியுறுத்தியுள்ளோம்.

புலம்பெயர் தமிழர்களுக்கும் புலிகளின் செயற்பாட்டாளர்களுக்கும், இரட்டைக் குடியுரிமை வழங்குவது சிறிலங்காவுக்கு மிக மோசமான ஆபத்தை ஏற்படுத்தும். இவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழக்கும் போது, கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். இவர்களால் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் எடுத்துக் கூறியுள்ளோம்.

புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கப்பட்டிருப்பதற்கும் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளோம்.

மயிலிட்டியில் இருந்து சிறிலங்கா இராணுவத்தை வெளியேற்றுவதற்கு தமிழ் அரசியல்வாதிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஆயுதக் கிடங்குகள் உள்ளிட்ட மிக முக்கியமான இராணுவ நிலைகள் மயிலிட்டியில் அமைந்துள்ளன. இங்கு மீள்குடியேற்றம் மேற்கொள்வதற்கு, இராணுவத்தை அகற்றுமாறு கூட்டமைப்பினர் அழுத்தம் கொடுப்பதுடன், இடம்பெயர்ந்த மக்களை வேறு இடங்களில் குடியமர்த்துவதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

எந்தச் சூழ்நிலையிலும் மயிலிட்டியை விட்டுக் கொடுக்கக் கூடாது, சிறிலங்கா இராணுவம் அங்கு நிலைகொண்டிருக்க வேண்டும், மயிலிட்டியை விட்டு வெளியேற்றப்பட்டால், இராணுவத்தினரின் உளவுரண் பாதிக்கப்படும் என்றும் சிறிலங்கா அதிபரிடம் வலியுறுத்தியுள்ளோம்.

வடக்கில் இருந்து திட்டமிட்ட அடிப்படையில், எல்லா சிங்கள பொதுச் சேவை அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டு தமிழ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தேசிய பாதுகாப்புக்கு மிகவும் அச்சுறுத்தலானது என்பதையும் எடுத்துக் கூறியுள்ளோம்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளோம். வடக்கு கிழக்கிற்கு வெளியிலேயே 50 விதுமான தமிழர்கள் வாழ்கின்ற நிலையில், அதிகாரப் பகிர்வினால் அவர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது என்றும், சிறிலங்கா அதிபரிடம் தெரிவித்துள்ளோம்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Posts