Ad Widget

மனைவியின் மரணத்திற்கு காரணமான கணவனுக்கு 6 வருடங்கள் கடூழியச் சிறை

judgement_court_pinaiமனைவிக்குக் கொலை அல்லாத மரணம் விளைவித்த குற்றத்துக்காக அவரது கணவனுக்கு 6 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது யாழ்.மேல் நீதிமன்றம்.

இந்த வழக்கு தீர்ப்புக்காக யாழ்.மேல் நீதிமன்றில் ஆணையாளர் ஜெ.விஸ்வநாதன் முன்னிலையில் நேற்று எடுத்துக்கொள் ளப்பட்டது.

கிளிநொச்சி உதயநகர் மேற்கைச் சேர்ந்த இலட்சுமணன் அமிர்த கௌரி (வயது65) என்பவர் கத்தியால் குத்தப்பட்டு 2010ஆம் ஆண்டு பெப்ரவரி 12ஆம் திகதி உயிரிழந்தார்.

சந்தேகத்தின் பேரில் அவரது கணவனான பே.இலட்சுமணன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

அவர் தொடர்பான வழக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் 2012ஆம் ஆண்டு மே 23ஆம் திகதி யாழ்.மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின்போது அவர்களின் மகனான அமரேசன் மேல்நீதிமன்றில் சாட்சியமளித்திருந்தார்.

அவர் தனது சாட்சியத்தில்,

“கிணற்றடியில் அம்மா கத்தும் சத்தம் கேட்டது. நான் அங்கு சென்றபோது அப்பா அருகிலுள்ள காணிக்குள் ஓடிச்சென்றார். அவரைத் துரத்திச் சென்று அடித்தேன்’ என்று கூறினார். அவர்களின் மகளான மகேஸ்வரி சாட்சியமளிக்கையில்,
“அம்மா அண்ணாவின் மடியில் தலை வைத்திருந்தார். பிள்ளைகளைக் கவனமாகப் பார்த்துக்கொள். நான் தப்பமாட்டேன். அப்பா என்னைக் கத்தியால் குத்திவிட்டார்’ என்று கூறினார்.

சான்றுப் பொருளான கத்தி பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தது. உடற்கூற்றுப் பரிசோதனையை மேற்கொண்ட யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியும் சாட்சியமளித்திருந்தார்.

மேல் நீதிமன்றில் எதிரியான இலட்சுமணன் வாக்குமூலம் அளிக்கையில், “எனக்கும் மனைவிக்கும் இடையில் சண்டை ஏற்பட்டது. நான் சீவல் தொழில் செய்வதால் எப்பொழுதும் கத்தியை என்னுடன் வைத்திருப்பேன், மனைவியை வேண்டு மென்று குத்தவில்லை என்றும், மனைவி வேறுநபருடன் தொடர்பு வைத்திருந்தார் என்றும் கூறினார்.

இவற்றை வைத்துப் பார்க்கும்போது அவர் கொலை செய்யும் நோக்கில் இதனைச் செய்யவில்லை என்பதை அவதானிக்க முடிகிறது. எதிரிக்கு எதிரான குற்றம் கொலையல்லாத மரணம் விளைவித்த குற்றமாகக் குறைக்கப்படுகின்றது.

அவருக்கு 6 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபா குற்றப்பணமும் விதிக்கப்படுகிறது. குற்றப்பணம் செலுத்தத் தவறின் 3 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதி மன்றம் தீர்ப்பளித்தது.

Related Posts