Ad Widget

மத்திய அரசு மட்டுமல்ல மாகாண அரசும் எங்களைக் கைவிட்டதாகவே உணர்கிறோம்! வலி.வடக்கு மக்கள் வேதனை!!

மத்திய அரசாங்கத்தினால் மட்டுமல்ல வடக்கு மாகாண அரசாலும் தாம் கைவிடப்பட்டுள்ளதாக உணர்வதாக வலி.வடக்கிலிருந்து இடம்பெயந்து அகதி முகாம்களில் வாழும் மக்கள் கவலை வெளியிட்டனர்.

நேற்று இப்பகுதி மக்கள் மழையால் எதிர்கொள்ளும் அவலங்களை பார்வையிட்ட செய்தியாளர்களிடம் அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையால் இருக்க இடம்கூட இன்றி அந்தரிக்கும் இந்த மக்கள், இதுவரை தமக்கு உருப்படியான உதவிகள் எவையும் மத்திய அரசிடமிருந்தோ அல்லது நாம் வாக்களித்துத் தெரிவு செய்த வடக்கு மாகாண அரசிடமிருந்தோ கிடைக்கவில்லை எனவும் கவலை தெரிவித்தனர்.

இலங்கை மத்திய அரசானது சிங்கள பெரும்பான்மை இன மக்களின் நலனையே கருத்திற்கொள்ளும். சிறுபான்மைத் தமிழ் மக்களான எம்மைக் கண்டுகொள்ளது என்பது 24 வருட அனுபவங்களின் அடிப்படையில் நாம் கண்டுகொண்டோம்.

மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தமிழ் அரசியல்வாதிகளாலும் எமது நலன் சாந்த திட்டங்களை முன்னெடுக்க முடியாத கையலாகத்தனத்தையும் நாம் அறிவோம். ஆனால் எமது அரசான வடக்கு மாகாண சபையாலும் எமக்கு எந்த வகையிலும் உதவ முடியாமல் இருப்பதையிட்டு நாம் கவலையடைகிறோம்.

வட மாகாண சபையிடமும் முன்கூட்டடிய திட்டமிடல்கள் எவையும் இல்லை. பாதிக்கப்பட்டு நாங்கள் தெருவுக்கு வரும் நிலையில்தான் 500 சாக்குகளுடன் வருகிறார்கள். வீடுகளுக்குள் அரைவாசிக்கு வெள்ளம் வந்த பின்னர் சாக்குகளை வைத்து என்ன செய்வது எனவும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இனியாவது வடக்கு மாகாண சபை முன் கூட்டிய திட்டமிடல்களுடன் செயற்பட வேண்டும். மத்திய அரசை விட வடக்கு மாகாண சபைக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளில் அதிக பொறுப்புண்டு. அவர்களை நாமே எமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்தோம்.

எனவே இருக்கும் வளங்களைக் கொண்டேனும் முன்கூட்டிய திட்டமிடல்களுடன் மக்களின் பாதிப்புக்களைத் தடுக்க அல்லது குறைக்க வடக்கு மாகாண சபை நடவடிக்கைளை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம் எனவும் வலி.வடக்கு முகாம்களில் கடும் மழை மற்றும் வெள்ளத்தால் பதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts