Ad Widget

மத்திய அரசின் கையாட்களாக இயங்கமுடியாது: வடமாகாண முதலமைச்சர்

மத்திய அரசாங்கத்தின் கையாட்களாக மாகாண அரசாங்கம் இயங்கமுடியாது என உலக வங்கியின் அலுவலர்களிடம் தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மத்திய, மாகாண அரசுகளுக்கு இடையில் புரிந்துணர்வு மனோநிலை இல்லையாயின் பணியை சரிவர முன்னெடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த உலக வங்கியின் அலுவலர்களான பீற்றர் டி எலிஸ், ஜெசிக்கா ரசல் ஸ்மிற், யென் மற்றும் நெல்சிப் திட்ட அலுவலர் சின்னத்தம்பி மனோகரன் ஆகியோர் வடமாகாண முதலமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

இக் கலந்துரையாடல் தொடர்பாக முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்ட விடயத்தை கூறினார்.

இது தொடர்பில் வடக்கு முதல்வர் மேலும் குறிப்பிடுகையில்

மத்திய அரசாங்கமும் மாகாண அரசாங்கமும் மற்றும் பிரதேச சபைகளும் எத்தகைய இணக்கத்துடன் பணிகளை முன்னெடுக்கின்றன என்பன தொடர்பில் என்னிடம் குறித்த குழுவினர் ஆராய்ந்திருந்தனர். இதன் போது மத்திய அரசாங்கமானது மாகாண அரசாங்கத்தை பொருட்படுத்தாமல் பலவழிகளில் உதாசினப்படுத்துவதை அவர்களுக்கு நான் சுட்டிக்காட்டியிருந்தேன்.

அத்துடன் மத்திய மற்றும் மாகாணத்திற்கு இடையில் புரிந்துணர்வும் இணைந்து செயற்படுகின்ற மனோபாவமும் இல்லையாயின் எம்மால் சரியாக இயங்கமுடியாது எனவும் நாம் அதிகார பரவலாக்கத்தை எதிர்பார்ப்பதையும் அவர்களிடம் எடுத்துரைத்தேன். மேலும் நாம் மத்தியின் கையாட்களாக இயங்க முடியாததையும் சுட்டிக் காட்டியிருந்தேன்.

இதன்போது குறித்த குழுவினர், இந்தோனேசியாவில் அனுபவ ரீதியாக தாம் பார்த்த பல விடயங்களை குறிப்பிட்டிருந்தார்கள். இதன்படி அதிகார பரவலாக்கமானது முக்கியமானது. உள்ளூராட்சி மன்றங்கள் கூடிய வலுவுடன் வேலை செய்வதற்கு அதிகார பரவலாக்கம் முக்கியமானது என்ற கருத்தை அவர்கள் என்னிடம் தெரிவித்திருந்தனர்.

எங்களுக்குள் போதுமான புரிந்துணர்வு இருக்கின்றது, ஆனால் அதனை அரசாங்கத்திற்கு எடுத்துரைப்பது தான் பிரச்சனையாகவுள்ளது. அந்தவகையில் நாம் அரசாங்கத்திற்கு பல வழிகளில் எடுத்துரைத்துவிட்டோம். எனினும் எங்களுடைய பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளதக்க வகையில் செயற்பாடுகள் இடம்பெறவில்லை என்பவற்றை அவர்களுக்கு எடுத்துக்கூறினேன் என்றார்.

Related Posts