Ad Widget

மணல் கடத்தல்காரர்களுக்கு இராணுவம் துணையா? இரண்டு டிப்பர்கள் விடுவிப்பு!!

வடமராட்சி கிழக்கு, குடத்தனையில் சட்டத்துக்கு புறம்பாக மணல் அகழ்வில் ஈடுபட்டு மணல் ஏற்றியவாறு இரண்டு டிப்பர் வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட நிலையில் இராணுவத்தினரின் அழுத்தத்தால் விடுவிக்கப்பட்டுள்ளன என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அத்துடன், மணல் கடத்தில் ஈடுபடுவோரை கைது செய்யும் நோக்குடன் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் அணிக்கு இராணுவத்தினரால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

வடமராட்சி கிழக்கில் இடம்பெறும் மணல் கடத்தல்களை தடுக்க சிறப்பு பொலிஸ் பிரிவு காங்கேசன்துறை மூத்த பொலிஸ் அத்தியட்சகரால் நியமிக்கப்பட்டது.

அந்தக் குழுவினரால் நேற்று இரண்டு டிப்பர் வாகனங்கள் மணல்காடு பற்றைக்காட்டுக்கு சட்டத்துக்கு புறம்பாக மணல் ஏற்றிய இரண்டு டிப்பர் வாகனங்கள் பொலிஸ் அணியால் கைப்பற்றப்பட்டு பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

எனினும் அந்த மணல் பலாலியில் இராணுவத்தினரின் தேவைக்கு ஏற்றப்பட்டது என்று வழங்கப்பட்ட அழுத்தத்தால் பொலிஸார் டிப்பர் வாகனங்களை மணலுடன் விடுவித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு சுற்றுக்காவல் நடவடிக்கைக்கு சீருடையில் சென்ற பொலிஸாருக்கு அங்கு கடமையிலிருந்து இராணுவத்தினர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதனால் மணல் கடத்தலை கட்டுப்படுத்த நியமிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் அந்தக் கடமையில் ஈடுபடமாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இராணுவத் தேவைக்காக மணல் அகழ்வு இடம்பெற்ற உரிய அனுமதி பெறப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்தச் செயற்பாடு மணல் கடத்தலில் ஈடுபடுவோருக்கு உதவுவதாக அந்தப் பகுதி மக்களால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Related Posts