Ad Widget

மட்டக்களப்பு மாவட்டத்தில் 550 குளங்களை காணவில்லை

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்பட்ட 700க்கும் மேற்பட்ட சிறியளவான நீர்ப்பாசன குளங்களில் தற்போது 30 வீதமான குளங்கள் மட்டுமே அதிகாரபூர்வ பதிவேடுகளில் காணப்படுவதாக மாவட்ட கமத்தொழிற் தினைக்களம் கூறுகின்றது.

batticaloa_irrigation_sri_lanka-kulam

சில பிரதேசங்களில் குளங்கள் மண் போட்டு நிரப்பப்பட்டு மக்கள் குடியிருப்புகளும் அரச கட்டடங்களும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மாவட்ட கமத்தொழில் சேவைகள் உதவி ஆணையாளரின் தகவல்களின் படி, 1976-ம் ஆண்டுக்கு முன்னர் 786 சிறிய நீர்ப்பாசன குளங்கள் பதிவேடுகளில் இருந்துள்ளன.

ஆனால், தற்போதைய அதிகாரபூர்வ பதிவேடுகளின் படி இந்த எண்ணிக்கை 233 ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பதிவேடுகளில் தற்போது காணாமல்போயுள்ள குளங்களில் 100-க்கும் மேற்பட்டவை மண் போட்டு நிரப்பப்பட்டு மக்கள் குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட உதவி கமநல ஆணையாளர் என். சிவலிங்கம் கூறினார்.

மேலும் 100க்கும் மேற்பட்ட குளங்கள் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதையும் அண்மைய தகவல்கள் காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

குளங்கள் தொடர்ந்தும் மண் போட்டு நிரப்பப்படுமானால் மக்களும் விவசாயிகளும் கால் நடைகளும் கடும் வறட்சியை எதிர்நோக்க நேரிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

மாவட்டத்தில் குளங்கள் மண் போட்டு நிரப்பப்படுவதை தடுப்பது மற்றும் கைவிடப்பட்டுள்ள குளங்களை புனரமைப்பு செய்வது தொடர்பில் தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Posts