மஞ்சள் கடவையில் மோட்டார் சைக்கிள் நிறுத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை

yellow-line-bike-courtயாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள மஞ்சள் கடவையில் வாகனத்தினை நிறுத்தி வைத்தவர்கள் யாழ்ப்பாணப் போக்குவரத்துப் பொலிஸாரினால் இன்று அதிரடியாக பிடிக்கப்பட்டு மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மஞ்சள் கடவையில் மோட்டார் சைக்கிளினைத் தரித்திருந்த 4 மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களுக்கு எதிராகவே வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் இது தொடர்பான விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் அநேகமான மஞ்சள் கடவைகளில் வாகனங்களைத் நிறுத்திவிட்டுச் செல்லும் நிலைமை காணப்படுகின்றது.

இனிவரும் காலங்களில் அவ்வாறு மஞ்சள் கடவையில் வாகனங்களை நிறுத்திச் செல்வோர் பிடிக்கப்பட்டு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படுவார்கள் என போக்குவரத்துப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கடந்த இரு மாதங்களுக்கு முன்னர், வைத்தியசாலைக்கு நோயாளர்களைக் கொண்டு வரும் அம்புலன்ஸ் வண்டிகள் உள்நுழைவதற்கு சிரமப்படும் விதத்தில் வைத்தியசாலை வாயிலுக்கு எதிரே மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டுச் சென்றவர்களுக்கு எதிராகவும் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்து விபத்துக்களை குறைப்பது தொடர்பாக யாழ். பொதுநூலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் யாழ்ப்பாணத்தில் வீதி ஒழுங்கு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென யாழ். போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி சமிந்த டி சில்வா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts