Ad Widget

மக்கள் சார்பான ஜனநாயக செயற்பாடுகளை வரவேற்கிறோம்!சம்பந்தன்

மக்கள் சார்பான ஜனநாயக செயற்பாடுகளை வரவேற்பதாகவும், அதேவேளை, கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு பாதகம் ஏற்படாத வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் இணைத்தலைமையில் தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக கொழும்பு தமிழ் நாளிதழ் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் புதிய பேரவையொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் நாமும் உறுதியாகவே இருக்கிறோம்.

விசுவாசமான நடவடிக்கைகளை வரவேற்கிறோம். அனைவரும் கருத்துக்களை வெளியிடுவதற்கு உரிமையுள்ளவர்கள்.

மேலும் சில அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அவற்றின் கொள்கைகளுக்கு உட்பட்டே செயற்படுவதும், கட்சியைப் பாதுகாக்க வேண்டியதும் முக்கியமானதாகும்.

மக்கள் சார்பான மற்றும் ஜனநாயக ரீதியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படலாம். அதேசமயம் ஒரு கட்சியின் கட்டமைப்புக்கும் கோட்பாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அவ்விதமான செயற்பாடுகள் அமையக்கூடாது ” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts