Ad Widget

“மக்கள் எங்கோ அங்கே மஹிந்த”! – அவரே சொல்கிறார்!

“தமது நலன்களைக் காப்பதற்கு தலைவன் வேண்டும் என்று முழுநாடுமே கேட்டு நிற்கின்றது. அந்தவகையில், மக்கள் எங்கேயோ அவர்களுக்கு தலைமைதாங்க நான் தயாராக இருக்கின்றேன்.”- இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

mahinda20160212

தனது அரசியல் பயணத்தின் தீர்க்கமான அடுத்தகட்ட நகர்வுகளை முன்னெடுக்கும் வகையில் பத்தரமுல்லையில் பொதுசனத் தொடர்பு அலுவலகத்தைத் திறந்துவைத்த பின்னர் ஆற்றிய உரையின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை இலக்குவைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள மஹிந்த ஆதரவாளர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சில பங்காளிக் கட்சிகள் இணைந்து, புதிய முன்னணியொன்றை உருவாக்குவது தொடர்பில் பல யூகங்கள் எழுந்துள்ள நிலையில் இந்தப் புதிய அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

திறப்பு விழாவில் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவான பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்த்தன, பந்துல குணவர்த்தன ,உதய கம்மன்பில, ரோஹித அபேகுணவர்த்தன, குமார வெல்கம, கீதா குமாசிங்க, பவித்திர வன்னியாராச்சிஆகியோருடன் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சரத் என் சில்வா ஆகியோரும் கலந்துகொண்டனர் .

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் மஹிந்தவுக்காக அண்மைக்காலமாக தீவிரமாகக் குரல்கொடுத்து வருகின்றவருமான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ இந்நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.

2015 ஜனவரி 8ஆம் திகதி ஆட்சி மாற்றத்தின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் பொது எதிரணியினர் செய்தியாளர் மாநாடுகளை நாரஹேன்பிட்டிய அபயராம விகாரையில் முன்னெடுத்து வந்தனர். அபயராம விகாரையை அரசியல் நடவடிக்கைக்குப் பயன்படுத்தி வந்தமை தொடர்பில் அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு எதிர்வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையிலேயே மஹிந்தவின் புதிய அலுவலகம் நேற்று பத்தரமுல்லை திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அலுவலகத் திறப்பை அடுத்து உற்சாகத்துடன் கருத்துக்களை மஹிந்த முன்வைத்துப் பேசினார்.

வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் வைத்துள்ளதாகக் கூறப்படும் 18 பில்லியன் டொலர் பணத்தை தேடித் தரும் வரை தான் பார்த்துக்கொண்டிருப்பதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

18 பில்லியன் டொலர் பணத்தை முடியாவிட்டால் ஒரு பில்லியன் பணத்தையாவது தேடித் தருமாறு தான் அரசிடம் கோரிக்கை விடுப்பதாகக் கூறினார்.

தனக்கு மாத்திரமன்றி நாமல் ராஜபக்ஷவுக்கும் இதுபோன்று வௌிநாட்டு வங்கிக் கணக்குகளில் பணம் வைத்துள்ளதாகக் கூறி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

அத்துடன் நாட்டின் ஊடக சுதந்திரம் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகக் கூறிய மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்றத்திலும் ஊடகவியலாளர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுவதாகத் தெரிவித்தார்.

2015 ஜனவரி 8ஆம் திகதியின் பின்னர் கட்சியின் தலைமைத்துவத்தையும் விட்டுக் கொடுத்ததாக கூறிய அவர், மக்கள் இன்னும் தன்னைத் தேடி வருவதாகவும், “மக்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு மஹிந்த” என்றும் கூறினார்.

“தன் மானமுள்ள ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். வெளிநாட்டுக்கு எங்களுடைய உரிமைகளை அடகுவைக்கின்ற ஓர் அரசாங்கமே தற்போது நாட்டில் உள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் தனது விஜயத்தின்போது இலங்கையின் நீதித்துறைக்குப் பெரும் அவமானத்தை ஏற்படுத்திச் சென்றிருக்கின்றார். எனவே, இதற்கு நீதித்துறையினர் இது பற்றி நன்றாக கவனத்தில் எடுப்பார்கள். அவர் சொன்னதை நம்பமாட்டார்கள் என நான் நினைக்கின்றேன். மக்கள் நலன் காப்பதற்கு தலைவர் வேண்டும் என்றுதான் முழுநாடும் கேட்டு நிற்கின்றது. ஆகவே, மக்கள் எங்கேயோ அங்கே அவர்களுக்கு தலைமை தாங்க நான் தயாராக இருக்கின்றேன்” – என்று அவர் மேலும் தெரிவித்தபோது, அங்கு கூடியிருந்தோர் கரகோஷங்களை எழுப்பினர்.

இந்த அலுவலகத் திறப்பு நிகழ்வில் 500 இற்கும் குறைவானவர்களே பங்குகொண்டமையானது மஹிந்தவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளுக்கான மக்கள் ஆதரவு தொடர்பில் சந்தேகங்களை எழுப்புவதாக அமைந்தது.

Related Posts