Ad Widget

மக்கள் அளித்த ஆணையை கூட்டமைப்பு தவறாக துஸ்பிரயோகம் செய்யக்கூடாது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

நடந்து முடிந்த மாகாணசபை தேர்தலில் மக்கள் அளித்த ஆணையை கூட்டமைப்பு தவறாக துஸ்பிரயோகம் செய்யக்கூடாதென கோரிக்கை விடுத்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதே வேளை மக்களும் அடுத்து தேர்தலொன்று வரும் வரை ஒதுங்கியிருக்கும் மனோபாவத்தினை கைவிட வேண்டுமெனவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பத்திரிகையாளர் மாநாட்டில் கட்சியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் மணிவண்ணன் முன்னாள் நாடாளுமன்ற அங்கத்தவர் பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

விடுதலைப் போராட்டம் மற்றும் தியாகங்கள் பற்றியும் சுயநிர்ணய உரிமை பற்றியும் தேர்தல் மேடைகளில் பேசிக்கொண்டிருந்த கூட்டமைப்பு தற்போது தேர்தலின் பின்னதாக 13 வது திருத்தச்சட்டத்தின் கீழான மாகாணசபை பற்றியும் உள்ளக சுயநிர்ணயம் பற்றியும் இப்போது பேசுகின்றது. மக்கள் ஆணையினை 13 வது திருத்தச்சட்டத்தின் கீழான மாகாணசபை எனும் தீர்விற்கான அங்கீகாரமாகவும் விடுதலைப்புலிகள் மீதான போர்க்குற்ற விசாரணைக்கு கோரும் அங்கீகாரமாகவும் கோர முற்படுவதாக அங்கு பேசிய கஜேந்திரகுமார் தெரிவித்தார்.

மக்கள் ஆணைக்கு எதிராக கூட்டமைப்பு செயற்படுவதனால் மாற்று அரசியல் தலைமை ஒன்றை மக்கள் விரும்புவார்களா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பொது செயலாளர் கஜேந்திரன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இனிமேலும் மௌனம் காத்துக் கொண்டிருக்காதெனவும் மக்களை அணிதிரட்டி மக்கள் போராட்டங்களை ஜனநாயக வழியில் முன்னெடுக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

நன்றி : குளோபல் தமிழ் செய்திகள்

Related Posts