Ad Widget

மக்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் நோக்கிலேயே காணிகள் வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது

சிறுபான்மை மக்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் நோக்கிலேயே வடமாகாணத்தின் எல்லைப் பகுதியிலுள்ள காணிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது என வட. மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.

குறித்த வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுமாறு கோரி வடமாகாண சபையில் நேற்று (வியாழக்கிழமை) பிரேரணை நிறைவேற்றப்பட்ட நிலையில் அது குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

மூன்று தசாப்த கால போருக்கு பின்னர் வட. மாகாணத்திலுள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் தமது சொந்த நிலங்களில் மீள்குடியேறி வருகின்றனர். இந்நிலையில், சிறுபான்மை மக்களின் மீள்குடியேற்றத்தை தடுத்து திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை திணிக்கும் நோக்கிலேயே இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகி உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

வட. மாகாணத்திலுள்ள 1 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு, ஜனாதிபதியினால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெற வேண்டும் என ஜனாதிபதியை வலியுறுத்தி மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் வட. மாகாண சபை அமர்வில் பிரேரணையொன்றை முன்மொழிந்தார்.

மேற்படி பிரேரணைக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் ஆதரவு தெரிவித்த நிலையில், வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுமாறு ஜனாதிபதியை கோரும் பிரேரணை சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related Posts