மகேஸ்வரி நிதியத்துக்கு எதிரான போராட்டம் கைவிடப்பட்டது

மகேஸ்வரி நிதியத்தில் சேவையில் ஈடுபட்ட யாழ். மாவட்ட பாரவூர்தி சங்க அங்கத்தவர்களின் அங்கத்துவ பணம் மீளளிக்கப்படவில்லை என்பதால் மகேஸ்வரி நிதியத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருந்த போராட்டம், பணம் மீளத்தரப்படும் என நிதியத்தினர் உறுதியளித்ததையடுத்து கைவிடப்பட்டுள்ளதாக பாரவூர்தி சங்கத்தின் தலைவர் செ.ஜெயக்குமார் தெரிவித்தார்.

அங்கத்துவ நிதியை மீள வழங்காத காரணத்தால் யாழ். மாவட்ட பாரவூர்தி சங்க அங்கத்தவர்கள், திங்கட்கிழமை (19) மகேஸ்வரி நிதியத்துக்கு முன்பாக போராட்டம் நடத்துவதற்கு முனைந்தனர்.

எனினும் அங்கத்துவப்பணம் மீள வாழங்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இது தொடர்பாக ஜெயக்குமார் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். மாவட்ட பாரவூர்தி சங்கத்தின் சுமார் 500 பாரவூர்திகள் கடந்த 2010ஆம் ஆண்டு மகேஸ்வரி நிதியத்தில் அங்கத்துவம் பெற்று சேவையில் ஈடுபட்டன. இதற்கு நிதியத்தால் 5,000 ரூபாய் அங்கத்துவ பணமாகவும், 300 ரூபாய் சேம பணமாகவும் அறவிடப்பட்டது. சேவை நிறுத்தப்படும் போது இந்தப் பணங்கள் திரும்ப வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2012ஆம் ஆண்டு நடுப்பகுதியில் எமது பாரவூர்திகளை சேவையில் ஈடுபடுத்தாமல் நிறுத்திய மகேஸ்வரி நிதியத்தினர் எமது வைப்புப் பணத்தை மீள வழங்கவில்லை. மீண்டும் பணத்தை வழங்கும்படி கோரி போராட்டம் முன்னெடுப்பதாக எமது சங்கம் தீர்மானித்திருந்தது
.
மகேஸ்வரி நிதியத்திலிருந்து விலகுவதற்கு விரும்பும் பாரவூர்தி அங்கத்தவர்களின் பெயர் பட்டியலை தங்களுக்கு அனுப்பி வைக்குமாறும், அவர்களுக்குரிய பணம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் மீள வழங்கப்படும் என மகேஸ்வரி நிதியத்தில் இருந்து எமக்கு ஞாயிற்றுக்கிழமை (18) கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது எனத் தெரிவித்த அவர், ஞாயிற்றுக்கிழமை (18) வரை 300 அங்கத்தவர்களின் பெயர்கள் கிடைத்ததாக கூறினார்.

Related Posts