Ad Widget

போர்க் குற்ற விசாரணை ஸ்தம்பிதம் குறித்து அழுத்தம்! ஐ.நா. அறிக்கையாளரிடம் நேரில் சுட்டிக்காட்டவுள்ளது சிவில் சமூகம்!!

“இலங்கை அரசு போர்க்குற்ற விசாரணையை தாமதப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றது. இந்த விடயத்தை இலங்கை வரும் ஐ.நா.வின் விசேட அறிக்கையாளரிடம் அழுத்தம் திருத்தமாக நேரில் தெரியப்படுத்தவுள்ளோம். அத்துடன் போர்க்குற்ற விசாரணையை உடன் ஆரம்பிப்பதற்கு இலங்கை அரசுக்கு ஐ.நா. அழுத்தம் வழங்க வேண்டும் என்பதையும் இதன்போது வலியுறுத்தவுள்ளோம்.” – இவ்வாறு சிவில் சமூகத்தினர் தெரிவித்தனர்.

இலங்கைக்கு வருகைதரும் ஐ.நாவின் நிலைமாற்று நீதி மற்றும் நல்லிணக்கம் தொடர்பான விசேட அறிக்கையாளரான பப்லோ டி கிரீப்புக்கும், சிவில் சமூகத்தினருக்கும் இடையில் நாளை திங்கட்கிழமை கொழும்பில் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இந்தச் சந்திப்பின்போதே மேற்படி விடயத்தை வலியுறுத்தவுள்ளதாக சிவில் சமூகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 32ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 13 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. இந்த அமர்வில் இலங்கை தொடர்பான ஐ.நா. தீர்மானத்தின் முன்னேற்றம் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் 29ஆம் திகதி வாய்மொழி மூல அறிக்கையைச் சமர்ப்பிக்கவுள்ளார்.

அதற்கு முன்னர் இடம்பெறும் பப்லோ டி கிரீப்பின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகின்றது. சிவில் சமூகத்தின் சார்பில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், பப்லோ டி கிரீப்பைச் சந்திக்கவுள்ளனர். இந்தச் சந்திப்பின்போது, இலங்கை அரசு நல்லிணக்க பொறிமுறை அமைத்தல் தொடர்பான விடயத்தை முன்னிலைப்படுத்தி போர்க்குற்ற விசாரணையைத் தாமதப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது என்ற விடயத்தைச் சுட்டிக்காட்டவுள்ளதாகத் தெரிவித்தனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இதன்போது குறிப்பிடவுள்ளனர். போர்க்குற்ற விசாரணையை உடன் ஆரம்பிப்பதற்கு இலங்கை அரசுக்கு ஐ.நா. அழுத்தம் வழங்கவேண்டும் என்பதையும் இந்தச் சந்திப்பில் சிவில் சமூகத்தினர் வலியுறுத்தவுள்ளனர்.

அதேவேளை, இந்தச் சந்திப்புக்குப்பின் போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி காத்திரமான அறிக்கையை தாம் வெளியிடவுள்ளதாகவும் சிவில் சமூகத்தினர் தெரிவித்தனர். இலங்கைக்கு வருகை தரும் ஐ.நாவின் நிலைமாற்று நீதி மற்றும் நல்லிணக்கம் தொடர்பான விசேட அறிக்கையாளரான பப்லோ டி கிரீப் சிவில் சமூகத்தினர், பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின் எதிர்வரும் 9ஆம் திகதி வியாழக்கிழமை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்து முக்கிய பேச்சு நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts